நீதிபதிகளின் வயதெல்லையை இரண்டு வருடங்களால் அதிகரிப்பது தொடர்பில் கட்சி ரீதியாக எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எவ்வாறாயினும் குறித்த செயற்பாடானது, நிறைவேற்று அதிகாரத்துக்கு நீதித்துறை அடிபணியச் செய்யும் முயற்சியாகும். அதற்கு இடமளிக்க முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான லால் விஜேநாயக்க தெரிவித்தார்.
நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்பு மற்றும் தேசிய மக்கள் சக்திக்குள் இருந்தவாறே அச்செயற்பாட்டுக்கு எதிரான நிலைப்பாடு, அடுத்தகட்டச் செயற்பாடுகள் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதிபதிகளின் வயதெல்லையை இரண்டு வருடங்கள் அதிகரிப்பதென்பது பொருத்தமற்றதொரு நடவடிக்கையாகும். நிறைவேற்றுத்துறையும், சட்டவாக்கத்துறையும் மக்களுக்கு எதிராக திரும்புகின்றபோது, அல்லது தனிநபருக்கு அநீதி இழைக்கப்படுகின்றபோது நாடக்கூடிய ஒரு இடம் நீதித்துறையாகும்.
தற்போது நீதித்துறை நிறைவேற்றுத்துறையை அடிபணியச் செய்யும் வகையில் முன்னெடுக்கப்படுவதே வயதெல்லை அதிகரிப்பதாகும். இது ஒருவகையில் நீதித்துறைக்கு வழங்கப்படும் இலஞ்சம், ஊழலாகவும் கொள்ளலாம்.
அதுமட்டுமன்றி, நாட்டின் அடிப்படை ஜனநாயக கோட்பாட்டுச் சமநிலையே இல்லாமல்போகும் நிலைமையே ஏற்படுகின்றது. ஆகவே வயதெல்லை அதிரிப்பதானது பொருத்தமற்ற நடவடிக்கையாகும்.
இந்த விடயம் சம்பந்தமாக தேசிய மக்கள் சக்திக்குள் கட்சியாக எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஒரு சந்திப்பு நடைபெற்றது. அதில் அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். நான் எனது கருத்துக்களை வெளிப்படுத்தினேன். அதேபோலவே ஏனையவர்களும் தத்தமது கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். அத்துடன் கூட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.
ஆகவே தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் எவ்விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. ஆகவே நான் கட்சியின் தீர்மானத்தை மீறியதாக கொள்ள முடியாது. நான் அடுத்த தடைவ கூட்டமொன்று நடைபெற்றால் அதில் பங்குபற்றுவேன். அதற்கு எந்தவிதமான தடைகளும் இல்லை.
மேலும் தற்போதைய நிலையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாட்டை ஒட்டுமொத்த சட்டத்துறையினரே எதிர்க்கின்ற நிலையில் அதன் ஆபத்துக்களை புரிந்து அம்முயற்சியை கைவிட வேண்டும் என்றார்.





