நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைக்கு முழு நாடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன் இந்த நடவடிக்கையை கைவிடுமாறு மஹா நாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை அரசாங்கம் மறைத்து வைத்துக்கொண்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார பண்டார தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (9) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்து, தற்போது நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அவரசமாக செயற்பட்டு வருகிறது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேநேரம் நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு மஹாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் அந்த கடித்தத்தை அரசாங்கம் மறைத்து வைத்திருக்கிறது.
இன்று அரச துறைகளில் பாரிய வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்த வெற்றிடங்களை நிரப்பாமல் இருப்பதால், அரச சேவைகள் செயற்திறமையுடன் இயங்குவதில்லை. நீதிமன்றங்களில் தேங்கி இருக்கும் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தவே நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் தெரிவிக்கிறது.அப்படியானால் அரச சேவைகளில் பணியாற்றுபவர்களின் வயதெல்லையும் அதிகரிக்க வேண்டும்.
நீதிபதிகளின் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகளும் எதிர்த்து வருகின்றன. இன்று ஜனநாயகத்தை பாதுகாத்துக்கொள்ள இருக்கும் ஒரே இடம் நீதித்துறையாகும். அதிலும் கையை வைப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. தனிநபர்களை இலக்குவைத்து சேவை நீடிப்புகளை வழங்கக்கூடாது என்று நாங்கள் தெரிவிக்கிறோம். அரசாங்கம் இவ்வாறு தனி நபர்களை இலக்குவைத்து, சேவை நீடிப்பு வழங்குவதன் மூலம், புதிய திருடர்களை கைதுசெய்வதை நிறுத்தி இருக்கிறது. கொள்கலன் கொள்லை, நிலக்கரி திருடர்கள், மத்திய வங்கி திருடர்களை பிடிப்பதை நிறுத்தவா இவ்வாறு செயற்படுகிறது என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது.
அதேநேரம் இலங்கை வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு சிறைச்சாலைகளில் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அரசாங்கம் இதற்கு எதிர்க்கட்சிகள் மீது விரல் நீட்டி வருகிறது. ஆனால் சிறைச்சாலைகளில் இடம்பெற்றுவரும் மோதல்களின் பின்னால் அரசாங்கம்தான் இருக்கிறதா என்ற சந்தேகம் எமக்கு இருக்கிறது.
ஏனெனில் இதன் மூலம் அரசாங்கம் அவசரகால சட்டத்தை நீடித்துக்கொண்டு, ஏகாதிபத்திய ஆட்சியை நோக்கி செல்வதற்கான திட்டமா என்ற சந்தேகம் எமக்கு இருக்கிறது. ஏனெனில் ஆயுதம் மூலம் ஆட்சியை கைப்பற்ற முயற்சித்தவர்களே தற்போது ஆட்சி செய்கிறார்கள். அன்று இவர்கள் நாட்டில் செய்த அநியாயங்களே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய காரணமாகும். அன்று பஸ்களை எரித்துவிட்டு, தற்போது புதிய பஸ்களை இறக்குமதி செய்து, அதனை ஈடுசெய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் இன்று நாட்டில் ஏற்படும் அனைத்து அனர்த்தங்களும் இவர்கள் கடந்த காலங்களில் செய்த அநியாயங்களின் பிரதிபலிப்பாகும் என்றார்





