நாட்டிலுள்ள நீதவான் மற்றும் மேல் நீதிமன்ற வளாகங்களில் நீண்டகாலமாகத் தேங்கிக் கிடந்த வாகனங்கள், மரக்குற்றிகள் உட்பட வழக்குப் பொருட்களை அப்புறப்படுத்தும் விசேட திட்டத்தின் மூலம் கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 952,896,911.74 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
வழக்குப் பொருட்கள் மூலமான வருமானத்துடன், ஏனைய நீதித்துறை சார் வருமானங்களையும் சேர்த்தால் மொத்தமாக 6,574,829,926.91 ரூபா (சுமார் 650 கோடி) வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
பிரதிகள் எடுப்பதற்கான கட்டணம், நோட்டரி கட்டணங்கள், அபராதங்கள், முத்திரை வரிகள் மற்றும் பிணை முறி பறிமுதல் மூலம் இந்த வருமானம் கிடைத்துள்ளது.
கடந்த பல தசாப்தங்களாகப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள், பெறுமதியான மரக்குற்றிகள், மணல், விவசாய உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் எனப் பெருமளவிலான பொருட்கள் நீதிமன்ற வளாகங்களை ஆக்கிரமித்திருந்தன.
இதனால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதுடன், பெறுமதியான வாகனங்கள் எவ்வித பயன்பாடும் இன்றித் திறந்தவெளியில் துருப்பிடித்து அழிந்து வந்தன. இது நாட்டுக்குப் பாரிய பொருளாதார நட்டத்தை ஏற்படுத்தியிருந்தது.
நீதியரசர் பி. பத்மன் சூரசேன அவர்கள் தலைமை நீதியரசராகப் பதவியேற்ற பின்னர், நீதிச் சேவை ஆணைக்குழுவின் ஊடாக இந்த அதிரடித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதியினால் அறிமுகப்படுத்தப்பட்ட “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்துடன் இணைந்து, நீதிபதிகள், பொலிஸார், முப்படையினர் மற்றும் அமைச்சு அதிகாரிகளின் பங்களிப்புடன் இது வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட வாகனங்கள் மற்றும் மணல் குவியல்களால் நிரம்பியிருந்த நீதிமன்ற வளாகங்கள் தற்போது அழகுபடுத்தப்பட்டு, பூந்தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. இது நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இவ்வாறான செயற்திட்டங்கள் மூலம் அரச திறைசேரிக்குக் கணிசமான வருமானம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




