தலவாக்கலை நகர மையத்தில் பட்டாசு கொளுத்திக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை மோதிவிட்டு தப்பிச் சென்ற பொலேரோ ரக லொறியின் சாரதி இன்று திங்கட்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்றது. தலவாக்கலை நகர மையத்தில் பட்டாசுகள் பற்றவைத்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது, நகர மையத்தின் வழியாக அதிக வேகத்தில் சென்ற லொறி மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த இரு இளைஞர்களும் பலத்த காயங்களுடன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்துக்குப் பிறகு தப்பிச் சென்ற லொறியின் சாரதி தலவாக்கலை கிரேட்வெஸ்டன் தோட்டத்தில் உள்ள வீட்டொன்றில் மறைந்திருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இச் சம்பவம் தொடர்பாக தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.