பரீட்சை நிலையத்திற்குச் செல்ல முடியாதவர்கள் பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்க வேண்டும்!

நாடளாவிய ரீதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக 2025 கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் தேர்வுகள் நடைபெறாத பாடங்களை 2026 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான திருத்தப்பட்ட பரீட்சை நேர அட்டவணை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இயற்கை அனர்த்தங்களால் பாதிப்படைந்த பாடசாலைப் பரீட்சார்த்திகள் தமது பரீட்சை நிலையத்திற்குச் செல்ல முடியாதிருப்பின் தங்களுடைய பாடசாலை அதிபருக்கு அறியத்தரல் வேண்டும். அவ்வாறு அதிபர்களும் தமது பாடசாலையில் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் இருப்பின் அது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர், பரீட்சை ஆணையாளர் (பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு, பெறுபேறு) ஆகியோருக்கு அறியத்தர வேண்டும் என்றும் பரீட்சை திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

அவ்வாறே பாதிப்படைந்த தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தமக்குரிய பரீட்சை நிலையத்திற்குச் செல்ல முடியாதிருப்பின் 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது 0112784208, 0112784537, 0112786616 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்து தகவல்களை தெரிவிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.