பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய போர்க்கப்பல்கள் நல்லெண்ண வருகைக்காக ஏப்ரல் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததையடுத்து, அந்த இரு கப்பல்களின் நல்லெண்ண வருகையானது நிறைவடைந்து, கடந்த திங்கட்கிழமை (13) இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றன.
‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய இரு கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் தனது கடற்படை மரபுகளின்படி கொழும்புத் துறைமுகத்தில் பிரியாவிடை அளித்தனர்.
இந்த நல்லெண்ணப் பயணத்தின்போது, மேற்குக் கட்டளைத் தலைமையகத்தில், ‘PNS TAIMUR’ கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் NIAMAT SAEED KHAN, ‘PNS ASLAT’ கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் NADIR MATEEN AFRIDI மற்றும் மேற்குக் கடற்படைக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமார ஆகியோருக்கு இடையே ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற்றது.
மேலும், ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய இரு கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் இருதரப்பு கடற்படைப் பயிற்சியில் (Bilateral Naval Exercise LION STAR V) பங்கேற்றன.
பிராந்திய கடற்படைகளுடன் புதிய அறிவு, திறன்கள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் உருவாக்கப்படும் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைந்த செயற்பாட்டுத் திறன், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள புதிய போக்குகள் மற்றும் சவால்களுக்கு இலங்கை கடற்படைக்கு கூட்டாக வெற்றிகரமாகப் பதிலளிக்க பெரிதும் உதவும் என தெரிவிக்கப்படுகிறது.













