பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாசி வேண்டி நாடளாவிய ரீதியில் சர்வமத வழிபாடுகள்!

‘திட்வா’ சூறாவளி மற்றும் வெள்ளப் பெருக்கால் அனர்த்தத்திற்கு உள்ளான  மக்களுக்கு, நல்லாசியையும்,  உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தி அடையவும் வேண்டி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில்,   செவ்வாய்க்கிழமை (9)  நாடளாவிய ரீதியில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றன.

அதன் ஒரு அங்கமாக,  கொழும்பு ஹுணுப்பிட்டிய கங்காராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தலைமைத் தேரரின் வழிகாட்டலில், கொழும்பு ஹுணுப்பிட்டிய கங்காராம விகாரையின் சீமா மாலகையில் சர்வராத்திரி பிரித் பாராயணம் நடைபெற்றது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஆகியோர் புனிதச் சின்னங்களுக்கு மலர் பூஜை செய்து வணங்கியதை அடுத்து மகா சங்கத்தினரால் பிரித் பாராயணம் ஆரம்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திடீர் அனர்த்த நிலைமையினால் நாடளாவிய ரீதியில் சேதமடைந்த வழிபாட்டுத் தலங்களைப் புனரமைப்பதற்காக பக்தர்களால் திரட்டப்பட்ட 128 மில்லியன் ரூபாய் நிதி அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

மல்வத்து பீடத்தின் அநுநாயக்கத் தேரர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் குமாநாயக்க, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி ஆகியோரும், அரச உத்தியோகத்தர்கள்,  பெரும் எண்ணிக்கையிலானோரும் கலந்துகொண்டனர்.