டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் உயிரிழந்த யுவதி ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சைகளையடுத்து அது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென செவ்வாய்க்கிழமை (03) வைத்தியசாலை முன்றலில் பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
கடந்த 23 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்ட 23 வயது யுவதி ஒருவரின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மறுநாள் காலை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த நாள் சட்ட வைத்திய அதிகாரியினால் உடற்கூற்று பரிசோதனைகள் செய்யப்பட்டு அன்றைய தினம் மாலை மேற்படி யுவதியின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எனினும் 23 ஆம் திகதி இரவு மேற்படி வைத்தியசாலை ஊழியர்கள் மூவர் பிரேத அறைக்குள் சென்று வந்தமை குறித்து ஏனைய ஊழியர்கள் வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர்.

அதையடுத்து வைத்தியசாலை சி.சி.டி.வி காணொளியை பரிசோதித்த போது குறித்த ஊழியர்கள் மூவரும் பிரேத அறைக்குள் சென்று வந்தமை ஊரிஜிதமாகியுள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் வராத காரணத்தினால் இது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென கூறப்படுகின்றது. மேலும் குறித்த ஊழியர்கள் மூவரும் மறுநாள் விடுமுறையில் சென்றுள்ளனர். இந்த விவகாரம் வைத்தியசாலை வட்டாரத்துக்கு வெளியேயும் கசிந்துள்ளது.
இதையடுத்து இது குறித்து நீதியான விசாரணைகள் நடத்தப்படல் வேண்டும் என இன்றையதினம் காலை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
அவ்விடத்துக்கு வருகை தந்த வைத்தியசாலை பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இது குறித்த உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றார்.
இதன் போது அங்கு கருத்து வெளியிட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், ‘ எமக்கு வைத்தியசாலை நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லை, எனவே இந்த விடயத்தை பொலிஸாருக்கு ஒப்படைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் விசாரணைகள் நடத்தப்படல் வேண்டும்’ என்று கோரிக்கை முன்வைத்தனர்.





