பிள்ளைகளின் முன்னிலையில் தந்தையை நோக்கி துப்பாக்கிச் சூடு!

மினுவங்கொட, கொட்டுகொட பகுதியில் புதன்கிழமை (13) பிற்பகல், அடையாளம் தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து, திலீப லக்மால் எனப்படும் ‘பஸ் திலீப’ என்பவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

சம்பவம் நடந்தபோது, பஸ் திலீப தனது மனைவி, நண்பர், மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வீட்டின் முற்றத்தில் இருந்தார். குற்றவாளிகள் பாதுகாப்புப் படையினர் அணியும் சீருடைகளை ஒத்த ஆடைகளை அணிந்திருந்ததாக வீட்டார் தெரிவித்துள்ளனர்.

மாலை 2.30 மணியளவில் நடந்த இந்தச் சூட்டில், பஸ் திலீப உயிர் தப்பினார். துப்பாக்கிதாரிகள் உடனடியாக தப்பிச் சென்றனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த தருணம், மற்றும் சந்தேகநபர்கள் தப்பிச் செல்லும் காட்சி, அருகிலுள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.

பொலிஸார் தற்போது குற்றவாளிகளை தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸார் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை 80 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 44 பேர் உயிரிழந்துள்ளதோடு, 47 பேர் காயமடைந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.