சட்டவிரோதமான முறையில் கடல்வழியாக இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட பெருமளவிலான பீடி இலைகள் மற்றும் மருத்துவப் பொருட்களைப் புத்தளம், ஆலங்குடா கடற்கரைப் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் இன்று வியாழக்கிழமை (11) அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட ‘விஜய’ கடற்படை முகாம் அதிகாரிகளால் ஆலங்குடா கரையோரப் பகுதியை அண்மித்த கடற்பரப்பில் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இக்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினரின் விசேட ரோந்துப் பணியின் போது, கடலில் மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான விசைப்படகு ஒன்று சோதனையிடப்பட்டது.
இதன்போது, எவ்வித உத்தியோகபூர்வ ஆவணங்களுமின்றி நாட்டிற்குள் கொண்டு வந்த பீடி இலைகள்: 177 கிலோகிராமுக்கும் அதிகம் மருந்து மாத்திரைகள்: சுமார் 354,000 மாத்திரைகள், மருந்துக் களிம்புகள் : 7,673 பொதிகள், மருந்துப் பொருட்கள்: 118 போத்தல்கள் மற்றும் விசைப்படகு: 01 போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கடற்படையினர் இப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக, பிடிபடுவதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கில் கடத்தல்காரர்கள் இந்தச் சரக்குகளைப் படகுடன் அப்படியே கைவிட்டு கரையொதுங்கித் தப்பியோடியிருக்கலாம் எனப் பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான பீடி இலைகள், மருந்துப் பொருட்களின் துகள்கள் மற்றும் விசைப்படகு ஆகியன மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் கற்பட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்குக் கற்பட்டி பொலிஸார் தற்சமயம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.









