இந்தியாவிலிருந்து புதன்கிழமை (4) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள புத்த பெருமானின் புனித சின்னங்களை நாளை வியாழக்கிழமை (5) முதல் பொதுமக்கள் கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் தரிசனம் செய்ய முடியும் அதற்கு தேவையான அதை்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இன்றைய தினம் (5) காலை 6.00 மணி முதல் 11ஆம் திகதி காலை 7.00 மணி வரை 24 மணிநேரமும் இந்தத் தரிசனம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு விகாரையைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதுனடன் பொதுமக்கள் பயணிப்பதற்காக விசேட பேருந்துகளும் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப்பேசாளருமான எப்.யு.வுட்லர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
பார்வைக்க வைக்கப்படும் புத்தபெருமானின் புனித சின்னங்கள் தரிசனத்திற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பெருமளவானோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அமைதியான முறையில் பொதுமக்க புனித சின்னங்ககை தரிசிக்குமாறு கோருகிறேன். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கொழும்பில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பொலிஸாரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்போது பக்தர்கள் தமது நகைகள் மற்றும் பணப்பைகள் உள்ளிட்ட தனிப்பட்ட உடமைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், பாதுகாப்பு சோதனைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் வலியுறுத்துகிறேன்.
குறிப்பாக புனித சின்னங்கள் பார்வைக்கு வைக்கப்படும் அறைக்குள் தொலைபேசிகள், தலைகவம், பயணப்பைகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களைக் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல், விகாரைக்கு செல்லும் அனைத்து வீதிகளும் மூடப்படுவதால் பொதுமக்களின் சௌகரியம் கருதி விசேட பேருந்துகளும் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய பழைய எம்.ஓ.டி பூங்கா மற்றும் லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் ஆகிய இரு தரிப்பிடங்களில் இந்த விசேட சேவை பேருந்துகள் நிறுத்திவைக்கப்படும். 24 மணிநேரமும் பொதுமக்கள் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, ஜினரதன மாவத்தை, முத்தையா வீதி மற்றும் ஸ்டெப்பல் வீதி உள்ளிட்ட பல வீதிகள் ஊடாக விகாரையை நோக்கிச் செல்லும் பாதைகள் மூடப்படும். அத்துடன் நவம் மாவத்தை, பெரஹெர மாவத்தை மற்றும் ராம்நாயக்க மாவத்தை உள்ளிட்ட பிரதான வீதிகளில் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக வாகனங்களை நிறுத்துவதற்கு போர்ட் சிட்டி, கிரீன் பாத், விஹாரமஹாதேவி பூங்கா மற்றும் கொழும்பு சிட்டி சென்டர் அருகே உள்ள பழைய சதொச காணி உள்ளிட்ட இடங்களில் இலவச தரிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் லேக்ஹவுஸ் முன்பாக மற்றும் பழைய மெனிங் சந்தை பகுதிகளில் கட்டணத் தரிப்பிட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த விசேட போக்குவரத்து ஒழுங்குவிதிகளைப் பின்பற்றி, புனித சின்னங்களை அமைதியான முறையில் தரிசிக்க ஒத்துழைக்குமாறு கோரிகிறேன் என்றார்.





