திருகோணமலை – புல்மோட்டை நகரில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்த கடை ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில்நேற்று செவ்வாய்க்கிழமை (03) இரவு முறையான அனுமதிப்பத்திரமின்றி, சட்டவிரோதமாகச் சேமித்து வைக்கப்பட்ட டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் புல்மோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 390 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டது.
சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் புல்மோட்டை, அர்பத் நகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்றைய தினம் புதன்கிழமை (04) குச்சவெளி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மேலும், இச்சம்பவம் குறித்து புல்மோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





