ராஜபக்ஷர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதால் அன்று கியூ.ஆர் முறைமை அமுல்படுத்தப்பட்டது.இரண்டு தலைவர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் இன்று பொருளாதார முன்னெற்றத்துக்கு மத்தியில் க்யூ ஆர் முறைமையை அமுல்படுத்த நேரிட்டுள்ளது.மத்திய கிழக்கின் மோதலால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகாதா,என்று எதிர்க்கட்சியினர் பிரார்த்தனை செய்கிறார்கள்.இவர்களின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது. பூகோள காரணிகளால் ஏற்பட்ட நெருக்கடியை சிறந்த முறையில் வெற்றிக்கொள்வோம் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்குமான ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளை தீர்மானித்தல் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
ராஜபக்ஷர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதால் அன்று கியூ.ஆர் முறைமை அமுல்படுத்தப்பட்டது.இரண்டு தலைவர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் இன்று பொருளாதார முன்னெற்றத்துக்கு மத்தியில் க்யூ ஆர் முறைமையை அமுல்படுத்த நேரிட்டுள்ளது. மத்திய கிழக்கின் தற்போதைய மோதலால் ஏற்படக்கூடிய நெருக்கடிகளுக்கு நாடு என்ற அடிப்படையில் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.
ஈரான் நாட்டு கப்பல் தாக்குதலுக்கு உள்ளான போது எதிர்க்கட்சியினர் மாறுப்பட்ட கருத்துக்களை மாத்திரமே குறிப்பிட்டார்கள். இந்து சமுத்திரத்தில் பல பலமிக்க நாடுகள் இருந்த போதிலும், மனிதாபிமான அடிப்படையில் ஈரானியர்களை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி முன்னிலையானார். ஜனாதிபதியின் தீர்மானத்தை முழு உலகமும் பாராட்டுகிறது. ஆனால் எதிர்க்கட்சியினர் அதனை கண்டுக்கொள்ளவில்லை.
எரிபொருள் விநியோக கட்டமைப்பினால் ஏற்படும் நெருக்கடியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். நாடு என்ற ரீதியில் பூகோள நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. எரிபொருள் முகாமைத்துவம் குறித்து ஆராய அமைச்சர்களான விஜித்த ஹேரத், அனில் ஜயந்த,குமார ஜயகொடி தலைமையிலும், அரச சேவை தொடர்பில் ஆராய பிரதமர் தலைமையிலும், அத்தியாவசிய பண்ட விநியோகம் தொடர்பில் ஆராய பிறிதொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கின் மோதலால் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகாதா, என்று எதிர்க்கட்சியினர் பிரார்த்தனை செய்கிறார்கள். தித்வா புயல் தாக்கத்தின் போதும் இவர்கள் இவ்வாறு தான் செயற்பட்டார்கள். ஆனால் நிலைமையை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்தோம்.தற்போதைய நிலைமையையும் வெற்றிக்கொள்வோம். நாட்டு மக்கள் உண்மை நிலைமை மற்றும் யதார்த்தத்தை நன்கு அறிவார்கள்.அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றார்.





