பேருந்து கட்டணங்கள் 10 சதவீதத்திற்கும் மேல் அதிகரிக்க வாய்ப்பு : தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

நாட்டில் டீசல்  விலை அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பஸ் கட்டணங்களை 10 சதவீதத்திற்கும் அதிகமான விகிதத்தில் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

டீசல் விலை அதிகரிப்பை பஸ் கட்டண திருத்தச் சூத்திரத்துடன்  ஒப்பிட்டுப் பார்க்கும் போது, தற்போதைய கட்டணத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமான தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி நிலான் மிராண்டா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை உயர்வால் பஸ் உரிமையாளர்களுக்கு ஏற்படும் மேலதிகச் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் இந்த கட்டண உயர்வு அமையவுள்ளது.

புதிய பஸ் கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கான இறுதி அனுமதி நாளை திங்கட்கிழமை (23) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்படவுள்ளது.

அமைச்சரவையின் அனுமதி கிடைத்தவுடன், புதிய கட்டண விபரங்கள் மற்றும் ஆகக்குறைந்த பஸ் கட்டணம் குறித்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக மேலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.