போலி செய்திகளை பரப்பியவர்களை நாம் வெளிப்படுத்துவோம் !

அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களை நீதிமன்றத்தில் முன்வையுங்கள். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் போலி செய்திகளை உருவாக்கி மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்தியவர்களை எம்மால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியும். பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதை விட, நீதிமன்றம் செல்வதே சிறந்ததாகவும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு  செவ்வாய்கிழமை (16) கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தித்வா புயல் தொடர்பில் எம்மால் கூறப்பட்ட விடயங்களையே வானிலை அவதானிப்பாளர்கள் சங்கமும் எழுத்து மூலம் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறது. நவம்பர் 12ஆம் திகதியிலிருந்து இது குறித்து முன்னறிவித்தல் வழங்கப்பட்டிருந்ததாகவும், அதற்கமைய 27ஆம் திகதி சூறாவளி ஏற்பட்டதாகவும் சில ஊடகங்களால் போலி செய்திகள் உருவாக்கப்பட்டன.

வளிமண்டலவியல் திணைக்களம் வழங்குவது புலனாய்வுத் தகவல் அல்ல, அவை எதிர்வு கூறல்களாகும் என்பதை அந்த ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 27ஆம் திகதியின் பின்னரே சிவப்பு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன. இந்திய வளிமண்டலவியல் திணைக்களமும் இது குறித்து அறிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதுவும் பொய்யாகும். இது குறித்து பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக இந்திய அரசாங்கத்திடம் விளக்கம் கோரியுள்ளது.

23 மற்றும் 24ஆம் திகதிகளில் இந்திய மற்றும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களங்களினால் காற்றழுத்த தாழ்வு பிரதேசம், காற்றழுத்த தாழ்வு மையமாக வலுப்பெறக் கூடும் என்று மாத்திரமே அறிவித்திருந்தன. அதற்கு அப்பால் எந்த அறிவித்தலும் வழங்கப்படவில்லை. இந்த காற்றழுத்த தாழ்வு மையம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக 27ஆம் திகதியே அறிவிக்கப்பட்டது. எனவே இது தொடர்பில் மீண்டும் மீண்டும் விளக்கமளித்துக் கொண்டிருப்பது பிரயோசனமற்றதாகும்.

இது குறித்த போலி செய்திகளை மேலும் மேலும் பிரசாரப்படுத்துவதன் மூலம் இந்த பேரழிவிலிருந்து நாடு மீளக் கட்டியெழுப்பப்படுவதற்கு பாரிய நெருக்கடிகள் ஏற்படுத்தப்படுகின்றன. எனவே இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு ஊடகங்களை வலியுறுத்துகின்றோம். அது மாத்திரமின்றி இது தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதை விட, நீதிமன்றத்துக்குச் செல்வது மேல்.

அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களை நீதிமன்றத்தில் முன்வையுங்கள். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் போலி செய்திகளை உருவாக்கி மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்தியவர்களை எம்மால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியும் என்றார்.