மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு உலக சைவத் திருச்சபை, திருக்கேதீச்சரம் திருத்தலப் பாதயாத்திரிகர்கள் சேவா சங்கம் இணைந்து நடாத்தும் வரலாற்றுப் புகழ்மிக்க திருக்கேதீச்சரம் ஆலயம் நோக்கிய சிவலிங்கப் பெருமானுடன் கூடிய அலங்கரிக்கப்பட்ட ஊர்தியைத் தாங்கிய சிவனடியார்களின் பாதயாத்திரை திங்கட்கிழமை (09.02.2026) காலை-09.15 மணிக்குத் தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியது.
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் நடைபெற்ற பூசை வழிபாடுகளில் பாத யாத்திரைக்கு எடுத்துச் செல்லும் வேல், சூலம் என்பன வைத்து வழிபாடுகள் நடாத்தப்பட்டது. தொடர்ந்து உலக சைவத்திருச் சபையின் தலைவர் சைவசித்தாந்த பண்டிதர் சிவஸ்ரீ.கதிர்குமாரசுவாமி சுமூகலிங்கம் சிவாச்சாரியார் கலந்து கொண்டு பாதயாத்திரையை ஆரம்பித்து வைத்தார்.
சந்நிதியான் ஆச்சிரமத்தை யாத்திரைக் குழு அடைந்ததைத் தொடர்ந்து அங்கு வழிபாடுகள் இடம்பெற்றது. அங்கு சந்நிதியான் ஆச்சிரம முதல்வரிடம் ஆசிகள் பெற்றுக் காலை ஆகாரத்தை நிறைவு செய்த பின்னர் யாத்திரைக் குழுவினர் தமது யாத்திரையைத் தொடர்ந்து வருகின்றனர். இதன்போது சந்நிதியான் ஆச்சிரம முதல்வரால் யாத்திரையில் பங்கேற்ற அனைவருக்கும் ஒருதொகை நிதியும் கையளிக்கப்பட்டுள்ளது.






