அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பைத்தியக்கார செயலால் நாங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதனால் மக்கள் பாரியளவில் நொந்துபோயுள்ள நிலையில் அரசாங்கத்தில் உள்ளவர்கள் முட்டாள் தனமான நகைச்சுவைகளை தெரிவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம், விளையாட்டில் ஊக்கப்பதார்த்தப் பயன்பாட்டுக்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தை நாங்கள் இந்த சபையில் எமது கண்டனத்தை தெரிவித்திருந்தோம். அமெரிக்க ஜனாதிபதி கிராமத்து சண்டியர் போன்றே செயற்படுகிறார் என்று தெரிவித்திருந்தோம். பொதுவாக அமெரிக்க மக்கள் பைத்தியகாரர் ஒருவரை ஜனாதிபதியாக நியமித்துக்கொள்வதில்லை. சிறந்த ஒரு மனிதரையே ஜனாதிபதியாக்குவார்கள். என்றாலும் சிலவேளை, ஜனாதிபதியான பின்னர் அவருக்கு பைத்தியம் பிடித்தால் என்ன செய்வது? அவரை பதவி விலக்க முடியாது.
அதேநேரம் ஜனாதிபதி ட்ரம்பின் வைத்தியர்கள், ட்ரம்பிற்கு பைத்தியம் என தெரிவித்தால், அவர் வைத்தியர்களை கொலை செய்துவிடுவார். அதனால் ட்ரம்புக்கு பைத்தியம் என்றாலும் வைத்தியர்கள் அதனை வெளியில் தெரிவிக்கமாட்டார்கள். அவரின் பைத்தியகார நடவடிக்கையால் தானே தற்போது எமக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதேபோன்று எமது அரசாங்க காலத்தில் கோட்டா கோ ஹோம் என்ற போராட்டத்தை ஆரம்பித்து மக்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஒருமாத காலம் வரை அங்கு தங்கி இருந்து போராட்டம் மேற்கொண்டு கோட்டாபய ரைாஜபக்ஷ்வை விரட்டினார்கள். ஆனால் கோட்டாய ராஜபக்ஷ்வை விரட்டும்போது நாட்டில் ஒரு கிலோ அரிசி 190 ரூபா, ஆனால் இன்று ஒரு கிலோ கீரி சம்பா 400 ரூபா, சீனி 120 ரூபா இன்று 240 ரூபா, பரிப்பு 190 ரூபா இன்று 360 ரூபா, 400 கிரேம் மால்மா 360 ரூபா இன்று 1150 ரூபா காஸ் 2982 ரூபா இன்று பெருநாள் பரிசாக காஸ் விலையை 4765 ரூபாவாக அதிகரித்திருக்கிறது.
சமையல் அறையில் மக்களுக்கு இருந்த சுமையை தாங்கிக்காெள்ள முடியாமலே அன்று மக்கள் வீதிக்கிறங்கி எமது அரசாங்கத்தை விரட்டினார்கள். அன்று எமது அரசாங்கத்திலும் தவறு இருந்ததை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இவ்வாறு அந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியதன் மூலம் மக்கள் எதிர்பார்த்த வாழ்வாதார சுமை குறைந்திருக்கிறதா என கேட்கிறோம். மின்சார கட்டணம் பாரியளவில் அதிகரித்திருக்கிறது. இதனையா மக்கள் இந்த அரசாங்கத்தின் மூலம் எதிர்பார்த்தார்கள்?
அதனால் இந்த ஆட்சி மாற்றம் மூலம் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் ஏற்பட்டுள்ளதா என மக்களிடம் கேட்டுப்பார்க்க வேண்டும். மக்களிடம் கேட்டுப்பார்க்க முடியுமான ஒரே முறைதான் மாகாணசபை தேர்தலை நடத்துவதாகும். அதனால் இந்த அரசாங்கத்துக்கு மக்களின் ஆதரவு இருக்கிறதா இல்லையா என்பதை பரீட்சித்துப்பாக்க அரசாங்கம் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அதேநேரம் மக்கள் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்க்கையை கொண்டுசெல்லும் போது அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், வாரத்துக்கு ஒருமுறை ஆடை துவைக்குமாறும் இரவில் செய்ய வேண்டிய வேலைகளை பகலில் செய்யுமாறும் தெரிவித்துவரும் கருத்துக்கள் மக்களை மேலும் கோபமூட்டும் வகையிலே இருக்கிறது. அதனால் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இவ்வாறான முட்டாள் தனமான நகைச்சுவைகளை தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
அதேநேரம் கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இதற்கு முன்னர் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பல்தின படகு உரிமையாளர்களுக்கு வழங்குவதாக தெரிவித்த நிவாரண தொகை, எத்தனை பேருக்கும் தொடர்ச்சியாக வழங்கி இருக்கிறார்கள் என கேட்கிறோம். அதேபோன்று மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தொடர்ந்தும் மக்கள் மீது சுமைகளை சுமத்த வேண்டாம் என கேட்கிறோம் என்றார்.





