மதுவரி உத்தியோகத்தர்களில் 20 – 30 சதவீதமானோர் மோசடியாளர்கள்

மதுவரி உத்தியோகத்தர்களில் 20 முதல் 30 சதவீதமானோர் மோசடியாளர்கள். நிலைமை மாறிவிட்டது. ஆகவே பழைய பழக்கத்தை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் என்.எச். பிரேமரத்ன தெரிவித்தார்.

அகில இலங்கை மதுவரி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 74 ஆவது வருடாந்த மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் மதுவரி திணைக்களம் முக்கிய பங்கு வகிக்கிறது. அரச வருமானத்தை ஈட்டித்தரும் துறைகளில் மதுவரித் திணைக்களம் பிரதானவொன்றாக காணப்படுகிறது.

நடப்பாண்டில் 242 மில்லியன் ரூபாய் என்ற இலாப இலக்கினை அடைந்துள்ளோம். இந்த இலாபத்தை மேலும் எம்மால் அதிகரித்துக்கொள்ள முடியும்.

சட்டவிரோத மதுபான உற்பத்திகளை தடுப்பது மற்றும் அனுமதிப்பெற்ற மதுபான நிலையங்களிடமிருந்து வரிகளை பெறுவது திணைக்களத்தின் பிரதான பணியாகும்.

மதுவரி உத்தியோகத்தர்களில் 20 முதல் 30 சதவீதமானோர் மோசடியாளர்கள் என்பதை குறிப்பிட வேண்டும்.கடந்த காலங்களில் எவ்வாறு செயற்பட்டார்களோ அவ்வாறே தற்போதும் செயற்படுகிறார்கள். நிலைமை மாறிவிட்டது. ஆகவே பழைய பழக்கத்தை திருத்திக்கொள்ளுங்கள். சட்டத்துக்கு அமைய சிறந்த முறையில் செயற்படுங்கள் என்று குறிப்பிட்டுக்கொள்கிறேன் என்றார்.