மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் புதன்கிழமை (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

தற்போதைய நெருக்கடி நிலையில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் மற்றும் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சு என்பவற்றின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி இதன்போது கவனம் செலுத்தினார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பிரச்சினைகளை முன்வைப்பதற்காக தூதரகங்கள் ஊடாக 24 மணிநேர அவசர சேவை மையங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவை வெற்றிகரமாக இயங்கி வருவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எந்தவொரு இலங்கையருக்கும் பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும், தூதரகங்களின் உதவியை நாடுபவர்களுக்குத் தேவையான வசதிகள் அளிப்பதற்குத் தேவையான நிதி அந்தந்த தூதரகங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் 1912 அவசர இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களின் பிரச்சினைகளை முன்வைப்பதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் 1989 அவசர அழைப்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அவசர இலக்கங்களுக்குக் கிடைக்கும் அனைத்து தகவல்களும் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்படும் எனவும் விசேட விமான வசதிகள் கோரி இதுவரை எவ்வித கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை என இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.
அத்தோடு இலங்கை வந்துள்ள வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் மீண்டும் கடமைக்குத் திரும்புவதற்கு காலஅவகாசம் பெற்றுத் தருமாறு சம்பந்தப்பட்ட தூதரகங்கள் ஊடாக கோரிக்கை விடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று நாடு திரும்ப முடியாமல் தங்கியுள்ள இலங்கையர்கள் குறித்து கண்டறிந்து, அவர்களை மீண்டும் அழைத்து வரத் தேவையான வசதிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
தற்போது விமான சேவைகள் படிப்படியாக வழமைக்குத் திரும்பி வருவதால், எவ்வித தடையுமின்றி தேவையான வசதிகளை வழங்க முடியும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரிகள் இதன் போது சுட்டிக்காட்டினர்.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக , சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள, சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் சுனில் ஜயரத்ன, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் தலைவர் புத்திக ஹேவாவசம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பதிராஜ, கட்டுநாயக்க விமான நிலைய முகாமைத்துவ பிரதானி அருண ராஜபக்ஷ மற்றும் அதிகாரிகள் இக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.





