மத்திய நெடுஞ்சாலை திட்டத்தின் முதற்கட்டமாக அமையும் கடவத்தை முதல் மீரிகம வரையிலான 37 கிலோமீற்றர் வீதிப் பகுதியின் நிர்மாணப்பணிகளின் முன்னேற்றத்தைப் பார்வையிடுவதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன வெள்ளிக்கிழமை (7) அப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தற்போது 53% ஐத் தாண்டியுள்ள இவ்வீதித் திட்டத்தை வரும் 2028 ஆம் ஆண்டில் முழுமையாக நிறைவு செய்ய முடியும் என திட்டப் பொறுப்புப் பொறியியலாளர்கள் இதன்போது தெரிவித்தனர்.
மேலும், இவ்வருட இறுதிக்குள் 65% நிர்மாண முன்னேற்றத்தைப் பெறுவதற்கும், 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அம்முன்னேற்றத்தை 95% வரை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த இத்திட்டத்தை, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி விரைவுத் திட்டமாக நிறைவு செய்வதற்குத் தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டன.
கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையின், கொழும்பு வெளிவட்ட வீதி மற்றும் தெற்கு நெடுஞ்சாலை ஆகியவற்றுக்கு நுழைவளிக்கும் கடவத்தை கட்டமைப்பு இடைமாற்றலின் நிர்மாணப்பணிகள் தொடர்பிலும் ஆராய்வதற்காக பிரதி அமைச்சர் இதில் கலந்துகொண்டார்.










