மன்னம்பிட்டி பகுதியில் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதால் திருகோணமலை மாவட்டத்தின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு வெள்ள அனர்த்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலைநாட்டில் பதிவாகி வருகின்ற மழைவீழ்ச்சியின் காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்வடைந்து வருவதால் மகாவலி கங்கை ஓரமாக உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக சேருவில, கிண்ணியா, மூதூர், கந்தளாய் உள்ளிட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கு வியாழக்கிழமை (18) மாலை நீர்ப்பாசன திணைக்களத்தினால் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மன்னம்பிட்டியின் எச்சரிக்கை நிலையாக 3.00 மீற்றர், சிறிய வெள்ள அளவாக 4.30 மீற்றர், பெரிய வெள்ள அளவாக 6.00 மீற்றர் காணப்படுகின்ற நிலையில் வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் 4.36 மீற்றராக இருந்தது.
பின்னர் அதன் மட்டம் உயர்வடைந்து வெள்ளிக்கிழமை (19) அதிகாலை 3 மணியளவில் 4.99 மீற்றராக காணப்பட்டது. பின்னர் காலை 9 மணியளவில் அது 4.99 மீற்றராக குறைவடைந்து காணப்பட்டது.
இவ்வாறான நிலையில் அதிகரித்த நீரானது இரண்டு தொடக்கம் மூன்று நாட்களில் மன்னம்பிட்டியில் இருந்து புறப்படுகின்ற மாவிலாற்றுப் பகுதியில் இணைவதையடுத்து, மாவிலாற்று அணைக்கட்டு, வெருகல் ஆற்றின் நீர்மட்டம் மற்றும் கங்குவேலி நீலாப்பொல பகுதியை அண்டிய மகாவலி ஆற்றின் நீர்மட்டங்களும் உயரும்.
இதேவேளை வெருகல் ஆற்றின் அணைக்கட்டு, மாவிலாறு அணைக்கட்டு மற்றும் நீலாபொல பகுதி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மகாவலி கங்கையின் அணைக்கட்டு பல இடங்களில் உடைந்திருக்கின்றன. எனவே நீர் நேரடியாக மக்களுடைய பகுதிகளை நோக்கி விரைவாக பாய்வதற்கான வாய்ப்புள்ளது.
அத்துடன் பல இடங்களில் இன்னும் நீர் வடியாமலும், பல இடங்களில் நிலத்தினால் நீரை உறிஞ்சமுடியாத நிலையும் காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் வெருகல், மூதூர் பகுதிகளில் மழை பெய்து வருகின்ற நிலையில் இதுவும் நீரின் அளவை அதிகரிக்கும். ஆகவே பொதுமக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.




