மன்னார் கடலில் மீன்பிடிப் படகுகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ; மீனவர் பலி

மன்னார் வங்காலைப்பாடு கடல் பகுதியில் இன்று புதன்கிழமை (15) அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு மீன்பிடிப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மன்னார்  கடல் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு மீன்பிடிப் படகுகள் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டுள்ளது.

வங்காலைப்பாடு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் படகும் காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் மீன்பிடிப் படகுமே மோதியுள்ளன.

இந்த விபத்தின்போது படகுகள் இரண்டும் பலத்த சேதமடைந்த நிலையில் படகில் இருந்த மீனவர்கள் கடலில் தூக்கி வீசப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டதோடு, ஒரு மீனவர் கடலில் காணாமல் போயிருந்தார். அவரை, சக மீனவர்கள் நீண்டநேரம் தேடியதன் விளைவாக, ஒரு மீனவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

உயிரிழந்தவர் காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த மீனவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடல் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை காயமடைந்த வங்காலைப்பாடு பகுதியைச் சேர்ந்த மற்றுமொரு மீனவர் சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

 

இதனையடுத்து, பொலிஸார் மற்றும் மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.

இந்த படகு விபத்துக்கான காரணம் மற்றும் மேலதிக விபரங்கள் தொடர்பாக அறிவதற்கு அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீன்பிடிக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த இந்தத் துயர சம்பவம் மன்னார் மீனவ சமூகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.