மருத்துவமனை மேற்பார்வையாளர்களுக்கு மிகப் பெரிய பொறுப்புண்டு: வடக்கு ஆளுநர் வேதநாயகன்

மருத்துவமனைகளின் நற்பெயரைப் பாதுகாப்பதிலும், நோயாளர் சேவைகளைத் திருப்திகரமான முறையில் வழங்குவதிலும் மருத்துவமனை மேற்பார்வையாளர் களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உண்டு என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் சுமார்- 10 ஆண்டுகளின் பின்னர் மருத்துவமனை மேற் பார்வையாளர்களின் பதவி உயர்வுக்கான நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு யாழிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (03.03.2026) இடம்பெற்ற போது பங்கேற்றுத் தலைமை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகள் தொடர்பாக மக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்றன. எதிர்காலத்தில் அவ்வாறான முறைப்பாடுகள் வராத வகையில் உங்களின் சேவைகள் அமைய வேண்டும். மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளர்கள் முகம் சுழிக்காதவாறு மருத்துவமனையின் சூழல் சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய முழுமையான பொறுப்பு உங்களுடையதே ஆகும். நேர முகாமைத்துவத்தை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக நோயாளர்களுடனான உங்களின் உறவு அன்பானதாகவும், கரிசனை மிக்கதாகவும் அமைய வேண்டும்.

தற்போது பதவி உயர்வுகள் வழங்கப்படுவதால், நிர்வாகத்தின் கீழ் நிலையில் புதிய வெற்றிடங்கள் உருவாகின்றன. அந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவது எமக்குச் சவாலானதொரு விடயமாகும். இருப்பினும், உரிய காலத்தில் பதவி உயர்வுக்குத் தகுதியானவர்களுக்கு அதனை வழங்க வேண்டும் என்பதற்காக நாம் கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுத்து அனைத்துப் பதவியணிகளுக்கும் உரிய பதவி உயர்வுகளைத் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றோம் என்றார்.