நாட்டில் அனர்த்த நிலைமை ஏற்பட்டபோதும் அரச வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு எதுவித தட்டுப்பாடும் ஏற்படவில்லை என்று பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.
கண்டி செயலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனர்த்த நிலைமைகளை அடுத்து நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு என்று கூறப்படுவதில் எதுவித உண்மையும் இல்லை. போதியளவு மருந்துப் பொருட்கள் நாட்டில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அனர்த்த நிலைமைகளை அடுத்து பாதுகாப்புக் கருதியே முன்னெச்சரிக்கையாக கொதித்தாறிய நீரைப் பருகும்படி கேட்கப்பட்டுள்ளதே தவிர தொற்றுக்கள் பரவும் சூழ்நிலை இல்லை. நீர் வடிகால் அமைப்பு சபையால் வழங்கப்படும் குடிநீரை அச்சமின்றி அருந்த முடியும். அவற்றை கொதிக்கவைக்காவிட்டாலும் பாதிப்புக்கள் ஏற்பட இடமில்லை. ஏனெனில், அவை சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.
ஆனால் சமூக நீர் வழங்கல் திட்டங்கள் ஊடாக அல்லது தனியார் துறை மூலம் வழங்கப்படும் குடி நீருக்கு அரசினால் உத்தரவாதம் வழங்க முடியாது. அவை முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா என்பது பற்றித் தெரியாது.
சேதம் அடைந்த அரச வைத்தியசாலைகள் துரிதமாக திருத்தப்பட்டு வருகின்றன. சில திருத்தப்பணிகளுக்கு வெளிநாட்டு உதவிகளும் கிடைக்கவுள்ளன. எனவே உளவியல் ரீதியில் எமக்கு அது பெரிய சக்தியாக உள்ளது. சேதமடைந்த சில வைத்தியசாலைகளின் கோவைகள் சிதைவடைந்துள்ளன. அவை சீர் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.





