மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் முன்னிலையாகவுள்ளனர்.
கடந்த 9 ஆண்டுகளாக மாகாண சபைகள் கூட்டப்படாததால் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. எனவே மாகாண சபைத் தேர்தல்களை பழைய விகிதாசார முறைப்படி நடத்த வேண்டும். பின்னர் தேர்தல் முறையைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செயற்குழுவில் முன்மொழிந்தனர்.
மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் கடந்த 17 ஆம் திகதி முதல் தடவையாகக் கூடியது.
மாகாணசபைத் தேர்தல்கள் சட்டம் திருத்தப்பட்டு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின் ஏற்படுகளுக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வட்டார எல்லைகளை தீர்மானிக்கும் நடைமுறை இதுவரையில் பூர்த்திசெய்யப்படாமையால் உருவாகியுள்ள சட்டரீதியான தடையின் காரணமாக மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று குழுவின் தலைவர் அமைச்சர் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய நிறுவனங்கள் மாகாண சபைகள் மூலமே நிர்வகிக்கப்படுகின்றன என்று எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
இதற்கமைய கடந்த 9 ஆண்டுகளாக மாகாண சபைகள் கூட்டப்படாததால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே மாகாண சபைத் தேர்தல்களை பழைய விகிதாசார முறைப்படி நடத்த வேண்டும் என்றும், பின்னர் தேர்தல் முறையைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்.
மாகாணசபைத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தையும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தையும் கட்டாயமாக்கும் ஒரு தேர்தல் முறையை உருவாக்குவத தொடர்பில் பரந்த, ஆழமான கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.
அதன்படி, மாகாணசபைத் நடத்துவதற்கு தற்போதைய சட்ட நிலைமை குறித்த அடிப்படைப் புரிதலைப் பெறுவதன் முக்கியத்துவத்தை தலைவர் வலியுறுத்தியுள்ளதுடன், இது தொடர்பான சட்ட ரீதியான வாய்ப்புக்கள் குறித்த கருத்துக்களைப் பெறுவதற்காக சட்டமாஅதிபர் அலுவலகம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகளை அழைப்பதற்கும் குழுவின் தலைவர் முன்மொழிந்தார்.இதற்கமைய சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதிகாரிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.




