மாடு திருட்டில் ஈடுபட்ட கும்பல் கஞ்சாவுடன் கைது : ஒருவர் தப்பியோட்டம்!

உடவலவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனஹடுவ பகுதியில், மாடு திருட்டில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்கள் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை (27) எம்பிலிபிட்டிய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து 2 கிலோகிராம் 770 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைதான நபர்கள் உடவலவ காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 29, 31, 37 மற்றும் 41 வயதுடையவர்கள் எனவும் பெல்லேபெத்த மற்றும் தனமல்வில பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த சுற்றிவளைப்பின போது சந்தேக நபர் ஒருவர் தப்பியோடியுள்ளதுடன், அவரிடமிருந்த கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்வதற்காக உடவலவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.