மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் விளையாட்டு மற்றும் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை ( 11 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இளைஞர் அபிவிருத்தி மற்றும் விளையாட்டு அபிவிருத்தித் துறைகளில் நீண்டகால ஒத்துழைப்புக்களை அதிகரித்தல், அதற்காக கட்டமைப்பு ரீதியான சட்டகத்தைத் தாபித்தல், நிகழ்ச்சித்திட்டங்கள், விசேட நிபுணத்துவம், தொழிநுட்ப அறிவு மற்றும் இயலளவை விருத்தி செய்கின்ற தொடக்க முயற்சிகளைப் பரிமாற்றம் செய்வதன் மூலம் இரு நாட்டு இளைஞர்களை வலுவூட்டல், தலைமைத்துவ அபிவிருத்தி, விளையாட்டு செயலாற்றுகை மற்றும் நிறுவன ரீதியான ஒத்துழைப்புக்களை அதிகரிக்கும் நோக்கில் மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையில் விளையாட்டு மற்றும் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மாலைதீவு குடியரசுக்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் இடையிலான குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.




