தமது கோரிக்கைகளுக்கு ஆக்கபூர்வமான பதில்கள் கிடைக்கும் வரை தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை சுயாதீன மின்சாரசபை தொழிலார் சங்கம் அறிவித்துள்ளது.
மின்சார சபை ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹாவின் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதுடன், அதனை வழமைக்கு கொண்டுவருவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
மறுசீரமைக்கப்பட்ட மின்சார சபையின் புதிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கும், மின்சார சபை தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று விசேட பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றது. இதன்போது, ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தம் உள்ளிட்ட 8 பிரதான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்தக் கலந்துரையாடல் குறித்து மின்சார தொழில்நுட்ப பொறியியலாளர் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார கருத்துத் தெரிவிக்கையில்,
புதிய நிறுவனங்களின் நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் ஒன்றை எட்டுவது உள்ளிட்ட 8 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதில் 6 முக்கிய விடயங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான இறுதி முடிவை ஜனாதிபதி அல்லது அமைச்சரே எடுக்க வேண்டும். எமது கோரிக்கைகளுக்கு முறையான தீர்வு வழங்கப்படாவிட்டால், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் எமது போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த நேரிடும்” என்றார். பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஊழியர்கள் திருத்தப் பணிகளில் இருந்து விலகியுள்ளதால், இந்தத் தடைகளைச் சரிசெய்ய மேலதிக காலம் தேவைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மின்சார சபையை புதிய நிறுவனங்களாக மாற்றுவதனால் ஊழியர்களின் உரிமைகளுக்கோ அல்லது வரப்பிரசாதங்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மின்சார சபை மறுசீரமைப்பு செயலணியின் தலைவர் புபுது நிரோஷன தெரிவித்துள்ளார். இருப்பினும், தமக்கு முறையான நியமனக் கடிதங்கள் மற்றும் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என மின்சார சபை தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





