முதலீட்டு சபையின் பணிப்பாளர் நாயகமாக ரேணுகா வீரக்கோன் நியமனம்

இலங்கையின் முதன்மை முதலீட்டு ஊக்குவிப்பு கட்டமைப்பான முதலீட்டுச் சபையின் (BOI) பணிப்பாளர் நாயகமாக ரேணுகா வீரக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்திற்கு முன்னதாக, ரேணுகா வீரக்கோன் சுமார்  நான்கு ஆண்டுகளாக பதில் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றி வந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் அவரது இந்த நிரந்தர நியமனமானது முதலீட்டுத் துறையில் அவருக்குள்ள பரந்த அனுபவம் மற்றும் நிறுவன ரீதியான அறிவை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதை வெளிப்படுத்துகிறது.

ரேணுகா வீரக்கோன் இலங்கை முதலீட்டுச் சபையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவராவார்.

அவர் பதில் பணிப்பாளர் நாயகமாகப் பொறுப்பேற்பதற்கு முன்பு முதலீட்டுச் சபையின் சிரேஷ்ட நிறைவேற்றுப் பணிப்பாளராகக் கடமையாற்றினார்.

அதேபோன்று அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான வசதிகளைச் செய்தல், கொள்கை ஒருங்கிணைப்பு மற்றும் மூலோபாய முன்னெடுப்புகள் போன்றவற்றலும் அவர் வலுவான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

நாட்டின் பொருளாதார மீட்சியை ஊக்குவிக்கவும்,  முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகள் அவசியமாக உள்ள  மிகமுக்கிய காலகட்டத்தில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.