முன்னாள் முதல்வரால் எடுத்துச் செல்லப்பட்ட வவுனியா மாநகர சபையின் செங்கோல், முதல்வரின் அங்கி, பதக்கம்!

வவுனியா மாநகர சபையின் செங்கோல், முதல்வரின் அங்கி, பதக்கம் என்பன முன்னாள் முதல்வரினால் எடுத்துச் செல்லப்பட்டமை தொடர்பாக மாநகர சபையின் செயலாளரால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக மாநகர சபையின் ஏனைய உறுப்பினர்களான பிரேமதாஸ் மற்றும் சி.கிரிதரன் ஆகியோர் தெரிவித்தனர்.

மாநகர சபையின் செங்கோல், அங்கி மற்றும் பதக்கம் என்பன காணாமல்போனமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில்,

வவுனியா மாநகர சபையின் செங்கோல், முதல்வரின் அங்கி மற்றும் பதக்கம் என்பன முன்னாள் முதல்வரினால் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

ஆளுநரினால் மாநகர சபை முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் அவர் தன்னுடைய பொருட்களுடன், குறித்த பொருட்களையும் கொண்டுசென்றுள்ளார்.

இது தொடர்பாக இன்றைய தினம் மாநகர சபை செயலாளரினால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் பொலிஸார் மாநகர சபைக்கு வந்து, விசாரணை நடத்தியதுடன்,  விரைவில் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்திருந்தனர் என அவர்கள் தெரிவித்தனர்.