யாழ். பல்கலைக்கழகத்தை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டும்: கஜேந்திரகுமார்

கல்வியில் வடமாகாணத்தை மீண்டும் முதலிடத்தில் கொண்டு வந்து நிலைநிறுத்துவதாயின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை உயர்ந்த நிலைக்கு இட்டுச் சென்றே ஆக வேண்டும். பல்கலைக்கழகத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது அதன் முதற்படிஎனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போதனை சாரா ஊழியர்களுக்கான ஆளணி வெற்றிடங்களை நிரப்புதல், ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உரிய தரப்புக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக செவ்வாய்க்கிழமை (28.10.2025) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டமொன்றை நடாத்தியிருந்தது. போராட்டத்தின் ஒருகட்டமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டமும் நடாத்தப்பட்டது. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பங்கேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு- கிழக்கில் போர் முடிவடைந்து 16 வருடங்களான பின்னரும் கல்வியில் வடமாகாணம் தொடர்ந்தும் கடைசி நிலையிலேயே இருக்கின்றது. இதன்மூலம் வடமாகாணம் எந்தளவுக்குத் திட்டமிட்ட ரீதியில் பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்படுகின்றது என்பதை நாங்கள் விளங்கிக் கொள்ள முடியும். போர் உச்சக் கட்டத்தில் நடந்த போதும் கூட வடமாகாணம் கல்வியில் மூன்றாமிடத்திலேயே காணப்பட்டது. போர் முடிவடைந்த பின்னர் தான் வடமாகாணம் கல்வியில் ஒன்பதாம் நிலைக்குத் தள்ளப்பட்டது.

வடமாகாணத்தின் கல்வியில் மையமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சுமார் 355 ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்படாமல் தொடர்ந்தும் வெற்றிடங்களாகவிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதொரு விடயமல்ல. வெற்றிடங்களை நிரப்புவதற்கான கோரிக்கையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் முன்வைக்காமலிருப்பது எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.