யாழ்.மாவட்டத்தில் 2030 ஆம் ஆண்டுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுத் திட்டம் பூர்த்தி செய்யப்படும்

யாழ். மாவட்டத்தில் 2030 ஆம் ஆண்டுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுத் திட்டம் பூர்த்தி செய்யப்படும் என வீடமைப்பு பிரதி அமைச்சர் டீ.பி சரத் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வும் 2025ஆம் ஆண்டு வீடமைப்பு வழங்கப்பட்டவர்களுக்கான ஆவணம் வழங்கும் நிகழ்வும் புதன்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தினுடைய கொள்கைகளில் ஒன்று வீடற்றவர்களுக்கு வீடு வழங்குவதாகும் எனவும், அந்த வகையில் யுத்தத்தால் பல வருடங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் போயுள்ளதாகவும் , யாழ்ப்பாண மாவட்டத்தில் தாய், தந்தை, கணவன், மனைவியை இழந்தவர்கள் வாழ்கின்றனர் எனவும், அவர்களுக்கு வீட்டு திட்டம் வழங்க வேண்டிய தேவைப்பாடு காணப்படுவதாகவும் 3,600 மேற்பட்ட குடும்பங்கள் அவ்வாறு காணப்படுவதாகவும், வீட்டுத் தேவைப்பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் காணப்படுவதாகவும், அவர்களின் பெயர்களையும் சேர்க்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும், எதிர்காலத்தில் அவர்களின் பெயர்கள் சேர்க்கப்படும்

மேலும், 2018 ஆம் ஆண்டு சஜித் பிரேமதாசா அவர்களினால் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மூலமாக வழங்கப்பட்ட வீட்டு திட்டங்களில் பல பூர்த்தி செய்யப்படாத வீடுகளாக காணப்படுவதாகவும், அவற்றை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், அவ்வாறு 3,815 வீடுகள் இன்னும் பூர்த்தி செய்ய வேண்டிய தேவை காணப்படுவதாகவும் .

மேலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பிரதேசங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டதாகவும், அங்குள்ள மக்கள் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்வதாகவும் அவர்களுடைய வாழ்க்கை மாற்றப்பட வேண்டும் எனவும் 2030 இல் யாழ்ப்பாணத்தில் வீட்டுத்திட்டங்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய தயாராக உள்ளதாகவும் நம்பிக்கையுடன் செயற்படுமாறும்.

வடக்கு தெற்கை இணைப்பதற்கான பாலமாக இக் காலம் அமைந்துள்ளதாகவும், மக்களின் தேவைகளாக குறிப்பாக கல்வி, நீர், போக்குவரத்து, பாதுகாப்பு போன்றன காணப்படுவதாகவும் அவற்றை முன்னுரிமை அடிப்படையில் பூர்த்தி செய்யப்படும் யுத்தத்திற்கு இனி இடமளிக்க போவதில்லை எனவும், சகோதரத்துவமாக வாழ நடவடிக்கை எடுப்பதாகவும் மூன்று வருட காலத்திற்குள் வீடு, கட்டுமானங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒன்றுபட்டு அழகான நாட்டை உருவாக்க வேண்டும் என்றார்.