யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் –  வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் இன்றைய தினம் (21) அமைதியான முறையில் கவனீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த வைத்தியசாலையில் ஏராளமான கட்டடங்கள் காணப்படுவதாகவும், இருப்பினும் வைத்தியர்கள் இருவரே கடமையில் இருப்பதாகவும், ஒரு தாதியர் கூட வைத்தியசாலைக்கு நியமிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கடந்த காலங்களில் குறித்து வைத்தியசாலையில் 24 மணிநேர சேவை வழங்கப்பட்டதாகவும், நோயாளர் விடுதி இயங்கியதாகவும், தற்போது அது நிறுத்தப்பட்டதாகவும், குறித்த வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டி காரைநகர் வைத்தியசாலைக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வினை வழங்குமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “வைத்தியசாலையை தரமுயர்த்துங்கள்”, “விடுதி இயங்கும் வைத்தியசாலையாக வைத்தியசாலை தொழிற்பட வேண்டும்”, “மக்களின் ஆரோக்கியம் எங்கள் உரிமை”, “சுகாதார சேவைகள் அரசின் கடமை”, “நோயாளிகளின் உயிர் முக்கியம்”, “வட்டுக்கோட்டை வைத்தியசாலையை புறக்கணிக்க கூடாது”, “மருத்துவ சேவையில் குறைபாடு வேண்டாம்”, “வைத்தியசாலையில் இடைநிறுத்தப்பட்ட கட்டட வேலைகளுக்கு நிதியை வழங்கு” உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில், பொதுமக்கள், வைத்தியசாலையின் பயனாளிகள், சமூக மட்ட அமைப்பினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.