ரஜு ஜயவீர மரணம் தொடர்பான விசாரணைகளால் சில தரப்பினர் கலக்கமடைந்துள்ளனர்

ஊடகவியலாளர் ரஜு ஜயவீரவின் மரணம்  தொடர்பில் தற்போது சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு நினைவுக்கு வரும்  என்று நினைக்கின்றோம். கடந்த கால கொலைகள், கொள்ளைகள் குறித்து முறையான விசாரணைகள் இடம்பெறும் போது ஒரு தரப்பினர் கலக்கமடைந்துள்ளார்கள். போராடுகிறார்கள் என  பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற அமர்வின்போது  விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய மரணங்கள்  மற்றும்  கொலைகள்  இடம்பெற்றுள்ளன. அதில் ஒன்று தினேஸ் சாப்டரின் மரணம் தொடர்பானது. அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட போதும், அது இதுவரையில் உறுதியாகவில்லை.

அத்துடன் டொரிண்டன் பகுதியில் ஊடகவியலாளர் ரஜு ஜயவீரவின் மரணம் தொடர்பானது. இந்த மரணம் தற்போது சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு நினைவுக்கு வரும்  என்று நினைக்கின்றோம். இதனால் இவர்கள் குழப்பமடைந்திருக்கலாம்.

எவ்வாறாயினும் இவர்களின் குழப்பங்களுக்கு நாங்கள் அடிப்பணியப் போவதில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மட்டுமல்ல நாட்டில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

நாட்டில் மக்கள் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இவை அனைத்தைப் பற்றியும் முறையான விசாரணைகள் நடக்கின்றன. அதன்படி சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்னால் கொண்டுவருவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.