லுணுகம்வெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவ்ரம்வெஹெர பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 378 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கல்ல குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, திங்கட்கிழமை (17) இந்த முற்றுகை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, லொறி ஒன்றில் கடத்தப்பட்ட 27 கிலோ 161 கிராம் உலர்ந்த கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லொறியுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து, மொனராகலை – கஹம்பான பகுதியில் உள்ள ஒரு சேனைப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 350 கிலோ 975 கிராம் கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மொத்தமாக 378 கிலோ 136 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு லுணுகம்வெஹெர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 38 மற்றும் 48 வயதுடைய சூரியவெவ மற்றும் திஸ்ஸமஹாராம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





