வங்காள விரிகுடாவில் இலங்கைக்குத் தென் கிழக்குத் திசையில் உருவாகும் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக வியாழக்கிழமை (12.02.2026) முதல் எதிர்வரும்- 14 ஆம் திகதி சனிக்கிழமை வரை வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா, மேற்கு, வட மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் சற்றுக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவர் பேராசிரியர். நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதன்கிழமை (11.02.2026) மாலை அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மீளவும் எதிர்வரும்- 16 ஆம் திகதியளவில் வங்காள விரிகுடாவில் மீண்டுமொரு புதிய காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது. இதனால், மீண்டும் இம் மாதம்- 16 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதேவேளை, இலங்கைக்கு அதிக மழை கிடைக்க காரணமாக விளங்குகின்ற மேடன் ஜுலியன் அலைவானது எதிர்வரும் நாட்களில் வங்காள விரிகுடாக் கடற்பகுதிக்கு வருமென எதிர்பார்க்கப்படுவதனால் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் இறுதி நாட்களிலும், மார்ச் மாதத்தின் ஆரம்ப நாட்களிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனினும், இதனை அடுத்த சில நாட்களிலேயே உறுதிப்படுத்த முடியும் என்றுள்ளது.




