வடக்கு மாகாண சபைக்குரிய சில திணைக்களங்களுக்கு இன்னமும் நிரந்தரக் கட்டடங்கள் இல்லை

வடக்கு மாகாண சபை ஊடாகச் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு, அவர்களது தொழில் மேம்பாட்டுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குவதுடன் மாத்திரமல்லாது, அவர்களது உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் நாம் ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றோம். அத்துடன், அவர்களது உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான கதவுகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளன என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் அலுவலகத் திறப்பு விழா, யாழ்ப்பாணம் பிரதான வீதியில்  புதன்கிழமை (31) காலை அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து உரையாற்றியபோதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர்,

வடக்கு மாகாண சபைக்குரிய சில திணைக்களங்களுக்கு இன்னமும் நிரந்தரக் கட்டடங்கள் இல்லை. அந்தத் தேவை நிச்சயம் பூர்த்தி செய்யப்பட வேண்டும். வாடகைக் கட்டடங்களில் இயங்குவதை முடியுமானவரை குறைத்துக்கொள்ளுமாறு அரசாங்கமும் எமக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளை, எத்தனையோ கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் வெறுமனே உள்ளன. அவற்றை எவ்வாறு ஆக்கபூர்வமான பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம் என்பது பற்றிச் சிந்திக்குமாறு நிதி ஆணைக்குழுவும் எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

சமூக சேவைகள், கூட்டுறவுத்துறை, தொழிற்துறை மற்றும் மகளிர் விவகாரம் ஆகிய முக்கிய துறைகளை உள்ளடக்கியதாக இந்த அமைச்சு விளங்குகின்றது.

போரால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதோடும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடும் நேரடியாகத் தொடர்புடைய ஒரு முக்கிய அமைச்சாக இது திகழ்கின்றது.

வாழ்வாதார உதவிகள் உரியவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் அரசாங்கம் மிகத் தீவிரமான அக்கறையுடன் உள்ளது. ஒருவருக்கு வழங்கப்படும் வாழ்வாதார உதவியானது, அவரை அதே நிலையில் வைத்திருக்காமல், அவரது தொழில் முயற்சியையும் வாழ்க்கைத்தரத்தையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதாக அமைய வேண்டும். எனவே, மக்களின் வாழ்வியலோடு பின்பிணைந்த மிக முக்கியமான பொறுப்பு இந்த அமைச்சுக்கு உண்டு.

நாம் வாழ்வாதார உதவிகளை வழங்குவதுடன் மட்டும் நின்றுவிடாது, சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்குரிய ஒழுங்குகளையும் செய்து கொடுக்கின்றோம். குறிப்பாக, அவர்களது உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றோம்.

புதிய கட்டடத்துக்குள் பிரவேசித்திருக்கும் இந்த அமைச்சினுடைய செயற்பாடுகள், எதிர்காலத்தில் இன்னும் உத்வேகத்துடன் முன்னெடுக்கப்படும் என நான் நம்புகின்றேன். பிறக்கின்ற புத்தாண்டில் இந்த அமைச்சின் பணிகள் சிறக்க எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் மற்றும் அமைச்சின் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.