மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் கடந்த த 9 ஆண்டுகளாக இந்த நாட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அந்த அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இது அநீதியான செயலாகும். வடக்கு, கிழக்கு மக்கள் கோரிய ஆட்சி அதிகாரத்தை வழங்குவதை நாம் ஒரு கடமையாகக் கருத வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
இலங்கை மன்றக்கல்லூரியில் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை (13) ஏற்பாடு செய்திருந்த விசேட கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.இலங்கை வரலாறு
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும். கடந்த 9 ஆண்டுகளாக இந்த நாட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அந்த அடிப்படை உரிமையை நாம் வழங்கவில்லை. இது மிகவும் அநீதியான செயலாகும்.
கடந்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் தமக்கான ஆட்சி அதிகாரத்தை கோரி போராடினர். அதற்காகப் பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. எனவே, அந்த உரிமையை அவர்களுக்கு வழங்குவதை நாம் ஒரு கடமையாகக் கருத வேண்டும்.
மாகாணசபைகள் இயங்காமல் அரச இயந்திரம் சரியாகச் செயற்பட முடியாது. அரச நிர்வாகக் கட்டமைப்பு முறையாக இயங்காத காரணத்தினால் நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்குப் பெரும் தடையாக ஏற்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். எனவே, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்களின் இந்த உரிமையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற சபை முதல்வர், மற்றும் ஒரு நிகழ்வின் போது நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்கள் அனைவரும் இந்த கருத்துக்கு முழுமையாக இணக்கம் தெரிவித்தனர்.
இதனை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரினதும் கருத்தாக இருந்தது. இங்கு பல்வேறு தேசிய மற்றும் பிராந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இருக்கிறீர்கள். எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தச் செயற்பாட்டை மிக விரைவாக முன்னெடுத்துச் செல்ல ஒன்றிணையுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கு மேலதிகமாக மற்றுமொரு கருத்தையும் கூற விரும்புகிறேன். அது கடந்த தேர்தல்களின் போது வழங்கப்பட்ட வாக்குறுதியான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது பற்றியதாகும். இது நாம் பல ஆண்டுகளாகப் பேசி வரும் ஒரு விடயம். இதனை நிச்சயமாக ஒழிப்பதாக ஜனாதிபதி அவர்கள் உறுதியளித்துள்ளார்.
நீதியான மற்றும் சுதந்திரமான சமூகத்திற்கான அமைப்பாக நாம் எப்போதும் இது குறித்துப் பேசி வருகிறோம். அவர் நாட்டிற்கு ஒரு வாக்குறுதியை வழங்கியுள்ளார். நாம்தனிப்பட்ட ரீதியில் அவரைச் சந்தித்த போதும், இதனை நிச்சயமாக ஒழிப்பதாக அவர் கூறியுள்ளார்.
அதன் மூலம் இந்த நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் உருவாகும் என நாம் எதிர்பார்க்கிறோம். நீதியான மற்றும் சுதந்திரமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக நாம் அந்தப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என்றார்.





