வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட திரிவைச்சகுளம் பகுதியில் பெரும்பான்மை இனத்தவர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர்வரையில் அடர்வனங்களை அழித்து ஆக்கிரமிப்புச் செயற்பாட்டை மேற்கொண்டுள்ளமை மற்றும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து ‘கிவுல்ஓயா’ நீர்ப்பாசனத் திட்டத்தை செயற்படுத்தவுள்ளமை என்பவற்றிற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்ட வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஆயிரம் பேர்வரையில் மக்களைத் திரட்டி வவுனியா வடக்கு பிரதேசசெயலகத்தை முற்றுகையிட்டு பாரிய ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள வேண்டாமெனத் தெரிவித்த வவுனியாமாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, ஒருமாதகாலத்திற்குள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதுதொடர்பில் தாம் கவனஞ்செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (09.12.2025) இடம்பெற்றநிலையில், குறித்த கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட திரிவச்ச குளம் பகுதியில் பெரிய மரங்கள் வீழ்த்தப்பட்டு சட்டவிரோதமாக பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக நாம் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளோம்.

எமது தமிழ்மக்கள் ‘மண்வெட்டிபிடி’ வெட்டியதற்காக கைதுசெய்யப்பட்டு வழக்குத்தொடரப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் இவ்வாறு பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டமைக்கு இதுவரை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து வனவளத் திணைக்களத்திடமும், மகாவலி அதிகாரசபையிடமும் நேரடியாகச் சென்று கேள்வி எழுப்பியிருந்தேன்.

இதன்போது காணி வழங்குவதற்கு பெயர்பட்டியலொன்றைத் தருமாறு மகாவலி அதிகாரசபையினரால் என்னிடம் கோரப்பட்டிருந்தது. இவர்கள் யாருடைய காணிகளை யாருக்குத் தரப்போகிறார்கள்? எமது தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளை அடாவடித்தனமாக ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு எமதுமக்களுக்கு காணி வழங்குவதற்காக இவர்கள் எம்மிடமே பெயர்பட்டியலைக் கோருகின்றனர்.

இவ்வாறு சட்டவிரோத அடர்வனங்கள் அழிக்கப்பட்டமைக்கு வனவளத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபை மேற்கொண்ட நடவடிக்கை என்ன?
ஊழலை ஒழிப்போம் என்ற வகையில் இந்த அரசு செயற்பட்டுவருகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் ஊழல் இல்லையா?
இவ்வாறாக அடர்வனங்கள் அழிக்கப்பட்ட மரங்கள் எங்கு கொண்டுசெல்லப்பட்டன? அதன்மூலம் பெறப்பட்ட வருமானங்கள் எங்கே?
வவுனியா வடக்கை முற்றாக ஆக்கிரமித்து ‘சிட்டிசன்’ திரைப்படத்தில் ஒரு ஊரையே காணாமல் ஆக்கியதுபோல வவுனியா வடக்கை காணாமல் ஆக்குகின்ற நிலமையை உருவாக்குகின்றீர்கள். இதனை எம்மால் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.
எனவே தயவுசெய்து பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவும், ஆளுநரும் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தவேண்டும்.
இதுதொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை எனில் இன்னும் ஒருமாதகாலத்திற்குள் ஆயிரக்கணக்கில் மக்களைத் திரட்டி வவுனியா வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக பாரிய அளவான போராட்டமொன்றினை மேற்கொள்ளவேண்டியிருக்கும் – என்றார்.
இந்நிலையில் இதன்போது பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க பதிலளிக்கையில்,
இவ்வாறு அடர்வனம் அழிக்கப்பட்ட பகுதி ‘கிவுல் ஓயா’ நீர்ப்பாசனத் திட்டத்தில் நீரில் மூழ்கப்போகும் பகுதியாகும்.
அங்கு பாரிய அளவில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. அவ்வாறு மரங்கள் வெட்டப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் மரக்கூட்டுத் தாபனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
குறித்த மரங்கள் வெட்டுகின்ற பகுதி பாரிய வனாந்தரப் பகுதி என்பதால், அங்கு சட்டவிரோதமாக மரங்களை வெட்டுபவர்களைப் பிடிப்பதில் சிரமங்கள் காணப்படுகின்றன. அவர்கள் ஒழிந்துகொள்கின்ற சந்தர்ப்பங்களே அதிகம் காணப்படுகின்றது.
இந்தவருடத்தின் இறுதியில் அல்லது அடுத்தவருடத்தின் ஆரம்பத்தில் கொழும்பில் இருந்து வனவளத்திணைக்கள அதிகாரிகளை அழைப்பதுடன், ஆளுநர், மாகாண, மாவட்ட மட்ட உத்தியோகத்தர்களையும் அழைத்து நாம் இதுதொடர்பான முடிவுகளை எடுப்போம்.
தற்போது மழைக்காலமாக இருக்கின்றது. இருப்பினும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர், உத்தியோகத்தர்கள் அடங்கலான குழுவாக நாம் அனைவரும் ஒருதடவை குறித்த திரிவச்சகுளம் பகுதிக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள நிலமைகளைப் பார்வையிடுவோம்.
அந்தவகையிலே காலையிலே இந்த களவிஜயத்தை முடித்துக்கொண்டு, மாலையில் மகாவலி அதிகாரசபை இருக்கின்ற அலுவலகத்திலே கலந்துரையாடலை மேற்கொண்டு இதுதொடர்பிலான முடிவுகளை எடுப்போம்.
தற்போது சக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கூறினார் ஆயிரம்பேரைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தார். இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதையே தெற்கிலுள்ள இனவாதிகள் எதிர்பார்க்கின்றனர். அதனை தமக்கு சாதகமான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொள்வதற்காகவே எதிர்பார்க்கின்றனர்.
எனவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாமல் நீங்களும், நாங்களும், ஆளுநர், மகாவலி அதிகாரசபை, வனவளத்திணைக்களமுமாக இந்த விடயங்களை நேரடியாக அவதானித்து இதுதொடர்பில் முடிவுகளை எட்டுவோம் – என்றார்.
இதன்போது வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்குமாகாணத்தின் ஐந்து மாவட்டத்திலும், வனவளத்திணைக்களத்தினால் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியிருந்தோம். அதன்பிற்பாடு பாராளுமன்றில் ஒரு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
மாவட்டமட்டத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்தக்குழுக்களின் ஊடாக வனவளத்திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் இனங்காணப்பட்டு விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென குறித்த கலந்துரையாடலின் பின்னர் எமக்கு அறிவித்தல் தரப்பட்டது.
எனவே மாவட்ட மட்டங்களில் அந்தக் குழுக்களை விரைவாக அமைத்தால் சிறப்பாக இருக்குமென வடமாகாண ஆளுநர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.
மேலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
கிவுல் ஓயா என்பது 6000ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியதாக 3000பேருக்கு பகிர்ந்தளிக்கின்ற ஒரு நீர்ப்பாசனத் திட்டமாகும். தமிழர்களின் பூர்வீக மணலாற்றில் அத்துமீறி குடியேற்றப்பட்டுள்ள பெரும்பான்மை இனத்தவர்களே இந்தத் திட்டத்தில் பயன்பெறவுள்ளனர். இவ்வாறாக மகாவலி அதிகாரசபையின் அடாவடித்தனங்கள் இடம்பெறுகின்றன.
ஏற்கனவே மகாவலி அதிகாரசபை கொக்குத்தொடுவாயில் 25ஏக்கர் காணிகள் வீதம் 30பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் முன்னாள் அமைச்சர் நிமால் சிறீபால டீ சில்வாவின் தங்கைக்கும் வழங்கப்பட்டுள்ளது.
மகாவலி அதிகாரசபை தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்தே இவ்வாறு பெரும்பான்மை இனத்தவர்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளது. இந்நிலையில் தமது பூர்வீக நிலங்களை இழந்த தமிழ் மக்கள் வாழ்வாதாரத்திற்கு வழியின்றித் தவிக்கின்றனர்.
மகாவலி அதிகாரசபை இவ்வாறு தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வழங்கினால் தமிழ் மக்கள் எங்கு போவது.
எமது தமிழ் மக்களை கடலில் தள்ளிவிடப்போகின்றீர்களா? இவ்வாறான செயற்பாடுகளை ஒருபோது அனுமதிக்கமுடியாது. எனவேதான் திரிவச்சகுளம் பகுதியில் சட்டவிரோதமாக காடழிப்பில் ஈடுபட்டவர்களை ஒருமுறை நேரடியாகச் சென்று துரத்தினேன். மகாவலி அதிகாரசபையின் இத்தகைய செயற்பாடுகள் தடுக்கப்படவேண்டும்.
பிரதி அமைச்சர் கூறியதற்கமைய குறித்த இடத்திற்கு நேரடியாக்களவிஜயம் மேற்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். ஆளுநர் கூறியதைப்போல மாவட்ட மட்டத்திலான குழுக்கள் அமைக்கப்படவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்கின்றோம்.
தங்களுடைய அரசின் ஆட்சியில் இவ்வாறான ஊழல்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
மகாவலி அதிகாரசபைக்குட்பட்டிருக்கும் திரிவைச்சகுளம் பகுதியில், பெரும்பான்மை இனத்தவர்கள் அந்தர்வெவ எனும் கமக்கார அமைப்பை பதிவு செய்வதற்கு கிராம அலுவலர் ஒருவரும், வவுனியா வடக்கு பிரதேசசெயலரும் சட்டவிரோதமான முறையில் அனுமதி வழங்கியிருக்கின்றனர்.
எமது மக்களுடைய நிலங்கள் அபகரிக்கப்படுகின்றபோது, அதனை எதிர்ப்பதற்காக ஜனநாயக ரீதியாக நாம் ஆர்ப்பட்டத்தினையே மேற்கொள்ளமுடியும்.
எனவே ஆயிரம் பேர்வரையில் மக்களைத் திரட்டி, வவுனியா வடக்கு பிரதேசசெயலகத்தினை முற்றுகையிட்டு நாம் ஆரப்பாட்டத்தை மேற்கொள்வோம். எம்மை கைதுசெய்வதெனில் அதைச் செய்யுங்கள். நாம் அதற்கு அஞ்சப்போவதில்லை.
தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து, இவ்வாறு பெரும்பான்மை இனத்தவர்களைத் தொடர்ந்து குடியேற்றங்களை மேற்கொள்ளவேண்டாம். தொடர்ந்தும் இவ்வாறு செயற்படுவீர்கள் எனில், எம்மீது துப்பாக்கிச் சூடு நடாத்தினாலும், எவ்வித அடக்குமுறைகளைக் கையாண்டு எம்மை அடக்கினாலும், எம்மால் இயலக்கூடிய அளவில் எதிரப்புக்களை வெளியிடுவோம் – என்றார்
இதன்போது இடையிட்டு கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு இன்னும் ஒருமாதகால அவகாசத்தைத் தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களைக் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




