சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட ஐஃபோன்களுடன் மூன்று வெளிநாட்டு வர்த்தகர்கள் இன்று புதன்கிழமை (11) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து இன்று பகல் 12.30 மணியளவில் ‘பிட்ஸ்யார்’ விமான சேவைக்குச் சொந்தமான 8D-822 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கொண்டுவந்த 4 பயணப் பொதிகளுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடியே 36 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியுடைய 454 ஐஃபோன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் மலேசியாவின் கோலாலம்பூர் பகுதியைச் சேர்ந்த 22, 26 மற்றும் 49 வயதுடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இவர்கள் மலேசியாவில் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையங்களை நடத்தி வரும் வர்த்தகர்கள் ஆவர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




