வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீதிமன்ற ஆவணங்களைப் பாதுகாக்க களமிறங்கிய ஹர்ஷ டி சில்வா!

நீதிமன்ற ஆவணங்களை பாதுகாப்பதற்கு தாம் எடுத்த நடவடிக்கையின் ஊடாக, தம்மால் வரலாற்றின் ஒரு பகுதியை காப்பாற்ற முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கண்டி நீதிமன்ற வளாகம் உட்பட பல அரச அலுவலகங்கள் நீரில் மூழ்கியதன் விளைவாக, இலங்கையின் நூற்றாண்டு கால வரலாற்றின் ஆதாரமாகத் திகழும் ஆவணங்கள் நிரந்தரமாக அழிந்துபோகும் அபாயத்தை எதிர்கொண்டன.

இந்தநிலையில், ஆவணங்களில் பூஞ்சணம் உருவாகி, அவை நிரந்தரமாகப் பழுதடைவதைத் தடுக்கும் நோக்குடன், அதி குளிரூட்டிகளை (ப்ரீஸர்) வழங்குமாறு தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், நதீரா ரூபசிங்க விடுத்த அவசரப் பொது வேண்டுகோளுக்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா உடனடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

அதன்படி, தனியார் நிறுவனமொன்றுடன் தொடர்புகொண்டு ஆவணங்களைப் பாதுகாக்கும் அத்தியாவசியத் தேவையாகிய 40 அடி நீளமுள்ள மூன்று குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை கண்டி நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தக் கொள்கலன்கள், ஆவணங்கள் பழுதடையாமல் பாதுகாக்கும் பணிகளுக்காக, அடுத்த மூன்று மாத காலப்பகுதிக்கு அங்கு பயன்பாட்டுக்காக வைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த துரித நடவடிக்கைக்காக, அதிகுளிரூட்டிகளை வழங்கிய தமது நண்பர், கண்டி நீதிபதிகள், சட்டத்தரணிகள், மின்சார சபை குழுவினர், தனது சகா சமிந்திராணி கிரியெல்ல மற்றும் அங்கீகாரங்களை வழங்கிய அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஹர்ஷ டி சில்வா தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்து, வரலாற்று ஆவணங்களைக் காப்பாற்ற வழிசமைத்த தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கும் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

“இன்று, எதிர்காலத்திற்காக நமது கடந்த காலத்தின் ஒரு பகுதியை நாம் காப்பாற்றியுள்ளோம்” என ஹர்ஷ டி சில்வா தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.