சுகாதாரத் துறையினரின் பாதுகாப்பு தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் நிலையில், பெண் வைத்தியர்களின் கௌரவத்தைப் பாதுகாக்க சுகாதார அமைச்சு தவறிவிட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 14 பெண் வைத்தியர்கள் தங்கியிருந்த விடுதியில், அவர்கள் குளிப்பதை 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் வீரர்கள் இருவர் இரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர். நாட்டின் நற்பெயரைப் பிரதிபலிக்கும் விளையாட்டு வீரர்களின் இத்தகைய இழிவான செயல் கண்டிக்கத்தக்கது. இது குறித்து விளையாட்டு மற்றும் கல்வி அமைச்சுக்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இச்சம்பவம் குறித்து சுகாதார அமைச்சு மௌனம் சாதித்து வருவது கவலையளிக்கிறது. பாதிக்கப்பட்ட வைத்தியர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவோ அல்லது சட்ட உதவிகளைச் செய்யவோ அமைச்சு முன்வரவில்லை. கொழும்பில் உள்ள ஒரு விடுதியிலேயே பாதுகாப்பு வழங்க முடியாத அமைச்சு, கிராமப்புற வைத்தியசாலைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்தும்?
தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இருக்கக்கூடாது. வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி பொலிஸ் மா அதிபர் மற்றும் சுகாதார அமைச்சருடன் அவசர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.





