ஷானி அபேசேகர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் இரண்டு முன்னாள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமைகள் மனுக்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (08) அனுமதி அளித்துள்ளது.

ஷானி அபேசேகர, முன்னாள் சிஐடி அதிகாரிகளான சுகத் மெண்டிஸ் மற்றும் நவரத்தின பிரேமரத்ன ஆகிய இருவருடன் சேர்ந்து, 2021 ஆகஸ்ட் மாதம் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளால் தாங்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அடிப்படை உரிமைகள் மனுக்களை தாக்கல் செய்தனர்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கில் ஆதாரங்களை ஜோடித்ததாகக் கூறி மூவரும் கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டனர்.

ஆயுதக் கிடங்கு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டதாகவும், அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டதாகவும் நீதிமன்றம் விசாரித்தது. 2013 ஆம் ஆண்டு  மே மாதம்  22 ஆம் திகதி அன்று முகமது ஷியாம் கொலை தொடர்பான விசாரணையின் போது அப்போதைய பொலிஸ் மா அதிபர்  வாஸ் குணவர்தனவின் உதவியாளர்கள் அளித்த வாக்குமூலங்களைத் தொடர்ந்து ஆயுதக் கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டது.

நீதிபதிகள் மஹிந்த சமயவர்தன, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய அமர்வு, மூன்று மனுக்களையும் தொடர்வதற்கு அனுமதி வழங்கியதுடன், மே 14 ஆம் திகதி வாதத்திற்கு ஒத்திவைத்தது.

மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி சாந்த ஜயவர்தன, ஷெஹான் டி சில்வா மற்றும் ஹபீல் பாரிஸ் ஆகியோர் ஆஜராகினர். முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் நெவில் டி சில்வா சார்பில் சட்டத்தரணி சஞ்சீவ விஜேவிக்கிரம ஆஜராகியிருந்ததுடன், சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி சஜித் பண்டார ஆஜரானார்.