1000 கிலோ பீடி இலைகள் மற்றும் ஏலக்காய் மீட்பு: இருவர் கைது!

புத்தளம், மாம்புரி கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட சுமார் 1,002 கிலோகிராம் பீடி இலைகள் மற்றும் 116 கிலோகிராம் ஏலக்காய் பொதிகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பயன்படுத்திய டிங்கி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வடமேற்கு கடற்படை கட்டளையகத்தின் ‘இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி’ பிரிவினர், கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) மாம்புரி கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இக்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கரை ஒதுங்கிய சிறிய ரக விசைப்படகு (டிங்கி) ஒன்றினை மறித்துக் கடற்படையினர் சோதனையிட்டனர்.

இதன்போது, ஈரமான நிலையில் பொதி செய்யப்பட்டிருந்த 1,002 கிலோகிராம் பீடி இலைகளும், 116 கிலோகிராம் எடையுடைய ஏலக்காய் மூட்டைகளும் கண்டறியப்பட்டன. இதனையடுத்து, படகிலிருந்த இரு சந்தேகநபர்களையும் கடற்படையினர் உடனடியாகக் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், ஏலக்காய் பொதிகள் மற்றும் விசைப்படகுடன் சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கட்டுநாயக்க சுங்கப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பினூடாக முன்னெடுக்கப்படும் இவ்வாறான சட்டவிரோதக் கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக் கடற்படையினர் தொடர்ச்சியான கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.