14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதுகாவலர் : குற்றவாளிக்கு கடூழிய சிறைத்தண்டனை!

2017 செப்டம்பர் மாதம் வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 54 வயது பாதுகாவலரை, வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா “குற்றவாளி” என அறிவித்து  இன்று (24) தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமி கருவுற்றமையைத் தொடர்ந்து பொலிஸ் புலன் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன் பிரகாரம், 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சந்தேக நபருக்கு எதிராக வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து, 2023இல் சந்தேக நபருக்கு எதிராக சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், சந்தேக நபர் தலைமறைவாகியிருந்தார். அதனையடுத்து, சந்தேக நபர் முன்னிலையாகாத  இவ்வழக்கானது சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் அரச சட்டத்தரணி ஸ்ரீ சிவஸ்கந்தஸ்ரீயினால் நெறிப்படுத்தப்பட்டது.

இவ்வழக்கு விசாரணைகளின் பின்னர், தீர்ப்பினை வழங்கிய நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, வழக்கு தொடுத்தவர் தரப்பானது சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டினை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நிரூபித்ததால் அந்த நபர் “குற்றவாளி” என அறிவித்தார்.

அத்தோடு, குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா நீதிமன்ற அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீடும் செலுத்தப்பட வேண்டும் என தீர்ப்பளித்தார்.

இந்த குற்றச்செயலின்போது எதிரியால் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கடுமையான உடல் மற்றும் உளவியல் சித்திரவதைகள், சிறுமி கருவுற்றமை, குற்றவாளி வழக்கு விசாரணைகளிலிருந்து தலைமறைவானமை, சிறுமியின் பாதுகாவலரே குறித்த செயலை புரிந்தமை போன்றவை குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட பிரதான காரணிகளாக அமைந்துள்ளன என மேல்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

சமீபத்திய செய்திகள்