2 கோடி ரூபா பெறுமதியான சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் மீட்பு: பிலியந்தலையில் ஒருவர் கைது!

இலங்கையில் பதிவு செய்ய முடியாத, சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஐந்து சட்டவிரோத  அதிவேக மோட்டார் சைக்கிள்களை  ஒன்றுதிரட்டிய வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு மோட்டார் சைக்கிள் மாத்திரம் சுமார் 65 இலட்சம் ரூபா பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை  (12) மாலை பிலியந்தலை மாற்று வீதியில் உள்ள வாகனம் பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றைச் சோதனையிட்ட போதே இந்த மோட்டார் சைக்கிள்களுடன் அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட  மோட்டார் சைக்கிள்களுடன் அதன் உரிமையாளரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நான்கு நபர்கள் இந்த மோட்டார் சைக்கிள் பாகங்களை தன்னிடம் கொண்டு வந்து கொடுத்ததாகவும், அவற்றை ஒன்றுதிரட்டிய வேலையை மாத்திரமே தான் செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.