2.5 மில்லியன் டொலர் மோசடி: 5 பேருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை

மத்திய வங்கியின் வெளிநாட்டு வள திணைக்களத்தின் கீழ் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடியான முறையில் பிரிதொரு தரப்புக்கு மாற்றப்பட்டிருக்கின்றமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமாரவுக்கு செவ்வாய்க்கிழமை (28) அறிவிக்கப்பட்டது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்னவினால் இது தொடர்பிலான முதல் தகவல் அறிக்கை செவ்வாய்க்கிழமை (28) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போதே இது தொடர்பிலான விடயங்கள் நீதிமன்றத்திற்குத் தெளிவுபடுத்தப்பட்டன. அதன்படி இந்த மோசடி நடவடிக்கைக்காகப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மின்னஞ்சல் முகவரியோடு நேரடியாகத் தொடர்புபட்ட ஐந்து பேருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம், அவர்களின் வங்கி கணக்கைப் பெற்று உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்கவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

அதன்படி இது தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  நேற்றைய தினம் நீதிமன்றத்துக்கு முதல் தகவல் அறிக்கையைச் சமர்ப்பித்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி சேனாரத்ன பின்வருமாறு நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தார்.

“கடந்த மார்ச் 24ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்தது. அந்த முறைப்பாட்டில் மத்திய வங்கியின் 2.5 மில்லியன் டொலர் மோசடியான முறையில் பிரிதொரு தரப்புக்கு மாற்றப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தோம். மத்திய வங்கியின் வெளிநாட்டு வள திணைக்களத்துக்கு  பல்வேறு நாடுகளிலிருந்தும் கிடைக்கும் கடன் மற்றும் நிதி உதவிகள் வந்து சேரும்.

அதன்படி ஆஸ்திரேலியாவினால் வழங்கப்பட்ட 5 திட்டங்களுக்கான கடன் உதவிகளும் கிடைக்கப்பட்டிருந்தன. கடன் மீளாய்வு நடவடிக்கைகளின் பின்னர், கடந்த 2025ஆம் ஆண்டு குறித்த கடனை மீளழிக்கும்  நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அதன்படி மூன்று திட்டங்களுக்காக ஆஸ்திரேலியா வழங்கிய கடன் தொகையை கட்டம் கட்டமாக வழங்கும் விதமாக எக்ஸ்போர்ட் பைனான்ஸ் ஆஸ்திரேலியா எனும் நிறுவனம் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. குறித்த நிறுவனம் வெளிநாட்டு வள திணைக்களத்துக்கு அனுப்பும் பற்றுச்சீட்டை  மையப்படுத்தி இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அவ்வாறு அனுப்பப்படும் பற்றுச்சீட்டானது அரச கடன் முகாமைத்துவ திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டு, போதுமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் வெளிநாட்டு வள திணைக்களம் ஊடாகக் கடனை மீளத் திருப்பிச் செலுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறும். இதுவே சாதாரணமாக நடைமுறையில் உள்ள விடயமாகும். அதன்படி குறித்த ஆஸ்திரேலிய அரச நிறுவனமானது ‘exportfinance.gov.au’ எனும் மின்னஞ்சல் முகவரியை இது தொடர்பிலான நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தி வந்துள்ளது. இந்த மின்னஞ்சல் முகவரிக்கு மிக நெருக்கமான முறையில் மோசடியான மின்னஞ்சல் முகவரி ஒன்று தயார் செய்யப்பட்டு இந்த மோசடிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி இந்த மின்னஞ்சல் முகவரிக்கு மிக நெருக்கமாக ‘exportfinance.com’ எனும் வணிக நோக்கத்திலான மின்னஞ்சல் ஒன்று இந்த மோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதேநேரம் இலங்கையின் மத்திய வங்கியின் கீழுள்ள வெளிநாட்டு வள திணைக்களத்தினுடைய இணைய பாதுகாப்பு தொடர்பாக ‘எனேபில்’ எனும் நிறுவனம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. குறித்த நிறுவனத்தின் தகவல் சேகரிப்பு மையத்தை (சேவர்) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரும் கணினி அவசர உதவிச் சேவை குழுவினரும் ஆராய்ந்து வருகின்றனர். இவ்வாறு அந்த மத்திய தரவு கட்டமைப்பு ஆராயப்பட்டபோது வெளித்தரப்பொன்று அந்த கட்டமைப்புக்குள் ஊடுருவி நடவடிக்கைகளை முன்னெடுத்ததற்கான எந்த ஆதாரங்களும் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை. எனவே இது தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

இலங்கையின் வெளிநாட்டு வள திணைக்களத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம்  முதல் 20 ஆயிரம் வரையிலான மின்னஞ்சல்கள் கிடைக்கப்பெறுகின்றன. அதிலிருந்து அனைத்தையும் பகுப்பாய்வு செய்து நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது சிரமமான காரியம்” என குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் தண்டனைச் சட்டக்கோவையின் 162, 386, 396, 399, 400 ஆம் அத்தியாயங்களின் கீழ் குற்றம் ஒன்று இடம்பெற்றிருப்பதாகக் கருதி விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதனை விட கணினி குற்றச்சட்டத்தின் 3, 4, 6 ஆம் அத்தியாயங்களின் கீழும் இந்த விசாரணைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் நீதிவான் இசுரு நெத்திகுமார எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரியான பொறுப்பதிகாரி சேனாரத்ன பதிலளித்தார். அதன்படி ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸ் மற்றும் சர்வதேச பொலிஸாரோடு இணைந்து இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், இந்த மோசடி நடவடிக்கைகளின் இடைத்தரகர்களாக எவரேனும் உள்ளனரா என்பது தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கையினுடைய வெளிநாட்டு வள திணைக்களத்தின் கணினி கட்டமைப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள ‘எனேபில்’ எனும் நிறுவனம், மின்னஞ்சலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து கடந்த 2025 அக்டோபர் 28 ஆம் திகதி குறித்த நிறுவனத்துக்கு தெளிவுபடுத்தி தகவல் அனுப்பியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் டொமைன் நேம் மாற்றப்பட்டிருப்பதாக அந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டிருப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

இவ்வாறான தகவல் கிடைத்த பின்னரே குறித்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களும் மோசடியான முறையில் மோசடி வங்கி கணக்கொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்தது. இந்த நிலையில் வெளிநாட்டு வள திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் இருந்த தரவுகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

குறித்த நடவடிக்கை திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டதா என்பது குறித்து ஆராயுமாறு விசாரணையாளர்களுக்கு நீதிவான் இசுரு நெத்திகுமார அறிவுறுத்தினார். குறித்த திணைக்களத்தினுடைய கணினிகள் அடிக்கடி மாற்றப்படுவதாகவும், அவ்வாறு மாற்றப்பட்டதன் விளைவாக தரவுகள் அல்லது மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டனவா என்பது தொடர்பாகவும் ஆராய்ந்து வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்தனர். இந்த நிலையில் நீதிவானின் கேள்விக்குப் பதிலளித்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி, இந்த விவகாரத்தில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் விசாரணைகள் தொடர்வதாகவும் குறிப்பிட்டார்.

இதனையடுத்தே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அனுமதியளித்து, இந்த விவகாரத்தில் பகுப்பாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கணினி அவசர உதவி அழைப்பு பிரிவினர், அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினிப் பிரிவின் பிரதானி உள்ளிட்டோரை உள்ளடக்கியதாக குழு ஒன்றினை அமைத்து நடவடிக்கை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை விட மோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மின்னஞ்சலோடு நேரடியாகத் தொடர்புபட்டதாகக் கருதப்படும் ஐந்து பேரின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்த நீதிவான், அவர்களின் வங்கி கணக்குகளைப் பெற்றுப் பரிசீலிக்கவும் உத்தரவிட்டார்.

நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்துக்கு 27 பக்கங்களைக் கொண்ட இரகசிய அறிக்கை ஒன்றினையும் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை நீதிமன்றத்தின் காவலில் வைக்குமாறும் இரகசியமாக அதனைப் பேணுமாறும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கோரிய நிலையில், அதற்கு நீதிவான் அனுமதி அளித்தார். அதன்படி இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை செய்து எதிர்வரும் ஜூன் மூன்றாம் திகதி மேலதிக விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.