இலங்கை மின்சார சபையானது உரிய நேரத்தில் முறையான கட்டண திருத்த முன்மொழிவை சமர்ப்பிக்கத் தவறியதன் காரணமாக, 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்தத்தை செயல்படுத்த போவதில்லை என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
குறித்த காலத்திற்குள் முறையான முன்மொழிவை சமர்ப்பிக்கத் தவறியமை, முதன்மை முன்மொழிவின் குறைபாடு காரணமாக இந்த காலாண்டிற்கு மின்சாரசபை ஒரு புதிய முன்மொழிவை முன்வைத்திருப்பினும், காலாண்டின் மீதமுள்ள குறுகிய காலத்திற்கு ஒரு திருத்தத்தை செயல்படுத்துவதன் மூலம் அதிக சதவீதத்தில் கட்டணங்களை மாற்றுவதன் தீமைகளைக் கருத்தில் கொண்ட பின்னரே இந்த தீர்மானம் எட்டப்பட்டது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை கடந்த 2025 ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆணைக்குழு மின்சார சபைக்கு தெரிவித்திருந்தது. இருப்பினும், மின்சார சபை 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதியன்று 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான தனது முன்மொழிவை சமர்ப்பித்தது.
குறித்த திட்டத்தில் உள்ள குறைப்பாடுகள் காரணமாக, 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதிக்கு முன்னர் முறையான முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவித்தது. திருத்தப்பட்ட முன்மொழிவை சமர்ப்பிப்பதில் மேலும் தாமதங்கள் ஏற்படும் என்று மின்சாரசபை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஆணைகுழுவிற்கு தெரிவித்தது. இன்றுவரை ஆணைகுழுவிற்கு திருத்தப்பட்ட கட்டண திருத்த முன்மொழி திட்டம் எதுவும் கிடைக்கவில்லை.
மேலும் கட்டண திருத்த முன்மொழி திட்டம் பெறப்பட்டவுடன், மதிப்பாய்வு மற்றும் பொது ஆலோசனைக்குப் பின்னர் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவடையும் காலத்திற்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். காலாண்டில் குறுகிய காலத்திற்கு வருமானம் மற்றும் செலவினங்களில் ஏற்படும் மாற்றங்களை சரிசெய்வதன் மூலம் மின்சாரக் கட்டணங்கள் ஒப்பீட்டளவில் அதிக சதவீதத்தால் மாறக்கூடும் என்பது கவனிக்கப்பட்டுள்ளது. இது தேசிய பொருளாதாரத்தில் அதிக எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
சரியான காலப்பகுதியில் செல்லுபடியாகும் கட்டண திருத்தத்தை சமர்ப்பிக்காததாலும், காலாண்டின் குறுகிய காலத்திற்கு கட்டண திருத்தத்தை செயல்படுத்துவதாலும் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதகமான தாக்கத்தை கருத்தில் கொண்டு, முதல் காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்தத்தை செயல்படுத்த வேண்டாம் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம் செய்தது.
2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை எதிர்வரும் பிப்ரவரி மாதம் 13ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு மின்சார சபைக்கு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.




