எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 50 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைத்து 10 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஈட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டு சுற்றுலாத்துறை இயங்கி வருவதுடன், சுற்றுலாத்துறையின் வேலைவாய்ப்பு எண்ணிக்கையை 800,000 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மை நிறுவனத்தின் 45 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் சுற்றுலாத்துறை அதிவேக மீட்சியைக் கண்டுள்ளது. எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 50 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைத்து 10 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஈட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகிறது. கடந்த 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை மூலமாக 3.2 பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் மட்டும் 13 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
தற்போதைய நிலையில் நாட்டின் 429,000 க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புக்களுக்கு சுற்றுலாத்துறையே வாழ்வாதரமாக அமைந்திருப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கிறது. இத்தகையை வளர்ச்சி பாதையை மேலும் வலுப்படுத்தி 2030 க்குள் சுற்றுலாத்துறையினுடைய வேலைவாய்ப்புப் படையை 800,000 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதேவேளை, இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மை நிறுவனம் டிப்ளோமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கும் நிலையிலிருந்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு மையமாக மாறியுள்ளது. இதன்மூலம் உள்நாட்டு மாணவர்களை சர்வதேச தரத்திலான உயர்கல்வியை விருந்தோம்பல் துறையில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், விருந்தோம்பல் துறையில் நிலவும் பெண்களின் பங்களிப்புக் குறைப்பாட்டை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் அவர்களுக்கு பாதுகாப்பான மரியாதைக்குரிய மற்றும் அமைதியான பணிச்சூழலை உருவாக்குவது அவசியமாகும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முறையான பயிற்சிகளை வழங்கி அவர்களை வேலைவாய்ப்புகளில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.





