நாடளாவிய ரீதியில் இதுவரையான காலப்பகுதியில் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், டெங்கு காய்ச்சல் காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் நிலவக்கூடிய மழையுடன் கூடிய கால நிலையோடு டெங்கு பரவல் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40 ஆயிரத்து 461 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 22 ஆக உயர்வடைந்துள்ளது. நாட்டில் நிலவிவரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது.
இம்மாதம் 18 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) வரை 1444 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதேவேளை கடந்த மாதம் மாத்திரம் 2,402 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு நேற்று முன்தினம் மாத்திரம் நூற்றுக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். டெங்கு பரவலின் அதிகரிப்பைக் கருத்திற் கொண்டு 7 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் (MOH) அதி உயர் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாகவும் 183 குறிப்பிடத்தக்களவு டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் 6971 பேரும், கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் 3252 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 5981 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 3553 பேர் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 4491 நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் தினங்களில் பதிவாகக்கூடிய டெங்கு நோயாளர்களின் வீதம் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. ஆகையால் பொதுமக்கள் டெங்கு அபாயத்தைக் கருத்திற் கொண்டு தாம் வாழும் சூழலில் டெங்கு நுளம்புகள் பெருக்கக் கூடிய பகுதிகளை இனங்கண்டு அவற்றை இல்லாதொழித்து தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வருடத்தில் இதுவரையான நாட்களில் 35 மலேரியா நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக மலோரியா கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் மலேரியா நோய் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதும் ஆபிரிக்க மற்றும் இந்தியா நாடுகளுக்குச் சென்று நாடு திரும்புவோரிடையே மலேரியா தெற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மலேரியா பரவியுள்ள நாடுகளில் இருந்து வரும் நபர்கள் மலேரியா தொற்றுக் குறித்து பரிசோதனைகளை மேற்கொள்ளவது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.